திருத்தணி முருகன் கோவிலில் கிருத்திகை விழா!
திருத்தணி: முருகன் கோவிலில் நேற்று வைகாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மூலவரை தரிசித்தனர்.திருத்தணி முருகன் கோவிலில், நேற்று வைகாசி கிருத்திகை விழாவை முன்னிட்டு, பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் வந்து மூலவரை தரிசித்தனர்.இவ்விழாவை முன்னிட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், பச்சை மாணிக்க கல், தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.இரவு வெள்ளித் தேரில் உற்சவர் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி மலைக் கோவில் வளாகத்தில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் புகழேந்தி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.