உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி மாதத்தின் கடைசி முகூர்த்தம் கோவில்களில் "களை கட்டிய திருமணம்

வைகாசி மாதத்தின் கடைசி முகூர்த்தம் கோவில்களில் "களை கட்டிய திருமணம்

சேலம்: வைகாசி மாதத்தின் கடைசி முகூர்த்தம் என்பதால், நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்களில், திருமண நிகழ்ச்சிகள் களை கட்டியது. ஒவ்வொரு சமூகத்தினரும், திருமண விழாக்களை தங்களுக்கு விருப்பமான கோவில்களில் நடத்துவது வழக்கமாகும். முகூர்த்த நாளில், பிரசித்தி பெற்ற கோவில்களில், திருமண விழா நடத்துவதற்கான அனுமதியை பெறுவதற்கு, சிரமம் ஏற்படும் என்பதால், முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்வர். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்தி, திருமணங்களை நடத்தலாம். நேற்று வைகாசி மாதத்தின் கடைசி முகூர்த்த நாளாகும். வளர்பிறை முகூர்த்தம் என்பதால், சேலம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில், திருமண நிகழ்ச்சிகளை நடத்த ஏராளமானோர் முன்கூட்டியே முன்பதிவு செய்திருந்தனர். சேலம் கோட்டை பெருமாள் கோவிலில், பத்து திருமணம், சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், 55 திருமணம், உத்தம சோழபுரம் கரபுர நாதர் கோவிலில், 60 திருமணம், பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில், 104 திருமணம் நடந்தது. மேலும், சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில்கள், பெருமாள் கோவில்கள், தனியாருக்கு சொந்தமான பரம்பரை கோவில்கள் ஆகியவற்றிலும், ஏராளமான திருமணங்கள் நடந்தது. திருமணத்துக்கு வந்த உறவினர்களோடு சேர்ந்து, பக்தர்களும், மணமக்களை ஆசிர்வாதம் செய்தனர். திருமண நிகழ்ச்சிகளால், திருவிழாக்களை போல, அனைத்து கோவில்களும் களை கட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !