உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மண்டப கோலம் பூண்ட கோவில்கள்

மண்டப கோலம் பூண்ட கோவில்கள்

ஈரோடு: வைகாசி மாத முகூர்த்த நிறைவு, வளர்பிறை தினத்தால், ஈரோடு மாவட்டத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள பல்வேறு கோவில்களில், 500க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தது. தமிழகத்தில், ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில், குறைந்த செலவில், அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் திருமணம் செய்து கொள்ள அரசு அனுமதித்தது. மேலும், கோவில்களில் நடக்கும் திருமணத்தை, ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கவும், அறநிலையத்துறைக்கு அரசு உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் விசேஷ தினங்கள், முகூர்த்த தினங்களின் போது, ஆயிரத்துக்கும் திருமணங்கள் நடந்து வருகிறது. நேற்று வைகாசி மாத முகூர்த்த நிறைவு மற்றும் வளர்பிறை தினம் என்பதால், ஏராளமானோர் திருமணம் செய்து கொள்ள முன்பதிவு செய்திருந்தனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் மட்டும் நேற்று, 500க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தது. இதுகுறித்து அறநிலையத்துறை உதவி ஆணையர் வில்வமூர்த்தி கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் பண்ணாரி மாரியம்மன் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், கோட்டை ஈஸ்வரன் கோவில் ஆகியவற்றில், அதிகளவில் திருமண நிகழ்ச்சிகள் பதிவாகிறது. நேற்று வைகாசி மாத நிறைவு வளர்பிறை தினம் என்பதால், பண்ணாரியில், 20, பவானி சங்கமேஸ்வரர் கோவில், 55, ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவில், 22 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. இவையாவும், முறைப்படி பதிவு செய்து, 300 ரூபாய் பணம் செலுத்தி, நடந்த திருமணம் ஆகும். இவர்கள் அனைவருக்கும், சில தினத்தில், திருமணம் செய்து கொண்டதற்கான ரிஜிஸ்டர் அலுவலக திருமண பதிவுகள் கிடைக்கும். பவானி சங்கமேஸ்வரர் கோவில் இரட்டை விநாயகர் கோவில் முன், 150க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்துள்ளது. இதேபோல், பண்ணாரி மாரியம்மன், கோட்டை ஈஸ்வரன் கோவில்களிலும், பதிவு செய்யாத திருமணங்கள் நடந்துள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !