ராமேஸ்வரத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா ராவணன் சம்ஹாரம் நிகழ்ச்சி!
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி நேற்று, ராவணன் சம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. ராமநாதசுவாமி கோயிலில் ஜூன் 18ம் தேதி, ராமலிங்க பிரதிஷ்டை விழா சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது. இதனையொட்டி, நேற்று மாலை கோயிலில் இருந்து ராமர், லெட்சுமணர் தங்க கேடயத்தில் புறப்பாடாகி, ராமேஸ்வரம் திட்டகுடி தெருவில் எழுந்தருளி, இலங்கை மன்னர் ராவணனை, கோயில் குருக்கள் மோகன் அம்பு எய்து சம்ஹாரம் செய்தார். பின், ராவணனுக்கு முக்தி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தவுடன், ராமர், லெட்சுமணருக்கு, மஹாதீபாரதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனைதொடர்ந்து, இன்று காலை ராமர், லெட்சுமணர், சீதை தங்க கேடயத்தில் புறப்பாடாகி, தனுஷ்கோடி செல்லும் சாலையில் உள்ள, கோதண்ட ராமர் கோயிலில் எழுந்தருளுவர். பின், ராவணன் தம்பி விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை கோயில் மேலாளர்(பொறுப்பு) கக்காரின், பேஷ்காசர் அண்ணாத்துரை செய்தனர்.