அடுத்த 3 ஆண்டுகளுக்கு கேதார்நாத், பத்ரிநாத் யாத்திரை கிடையாது!
டேராடூன் : உத்தர்கண்ட் மாநிலத்தில் இயற்கையின் கோர தாண்டவத்தின் விளைவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு கேதார்நாத் மற்றும் பத்ரிநாத்திற்கு செல்லும் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக உத்தர்கண்ட் அரசு அறிவித்துள்ளது. இப்புனித தலங்களும், அவற்றிற்கு செல்லும் பாதையும் கடுமையாக சேதமடைந்துள்ளதால் அவற்றை 3 ஆண்டுகளுக்குள் சீரமைக்க முடியாததால், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இயற்கை சீற்றம்: வடஇந்தியாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. யமுனை ஆற்றின் நீர் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கனமழை காரணமாக உத்தர்கண்ட், இமாச்சல் ஆகிய மாநிலங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி நூற்றுக் கணக்கானோர் பலியாகி உள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோரை காணவில்லை. இந்நிலையில் இந்துக்களின் புனித தலங்களான கேதார்நாத், பத்ரிநாத் ஆகியவற்றிற்கு யாத்திரை சென்ற பக்தர்கள் சுமார் 25,000 க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவு காரணமாக நடுவழியில் 3 நாட்களாக தவித்து வந்தனர். ராணுவ படையினரின் உதவியால் ஹெலிகாப்டர் மூலம் இவர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணியிலும் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. நடுவழியில் சிக்கி தவிக்கும் மேலும் பலரின் நிலை என்னவென்று தெரியவில்லை. உத்தர்கண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 150ஐ தாண்டி உள்ளது. கேதார்நாத் கோயிலைத் தவிர சுற்றி இருந்த கட்டிடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. கேதார்நாத் கோயிலுக்கு சொந்தமான 90 தங்கும் விடுதிகள் அனைத்தும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் அங்கு தங்கியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் நிலை என்னவென்று தெரியாததால் பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டக் கூடும் என அஞ்சப்படுகிறது.
அரசின் உத்தரவு: கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் புனித தலங்களுக்கு யாத்திரை வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவியும் இத்தலங்களுக்கு நிலை சீராகும் வரை யாரும் வரவேண்டாம் என உத்தர்கண்ட் அரசு அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து கேதார்நாத்-பத்ரிநாத் கோயில் கமிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி பி.டி.சிங் கூறுகையில், இந்த புனித தலங்களை சீரமைக்க இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம் என தெரிவித்துள்ளார். மேலும் இங்கு தாங்கள் காணும் காட்சிகள் மிகவும் வேதனை அளிப்பதாகவும், நம்ப முடியாததாகவும் உள்ளது எனவும், இன்னும் 3 ஆண்டுகளுக்குள் நிலை சீராகி மீண்டும் யாத்திரை தொடரும் என்று எதிர்பார்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.