உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கரன்கோவிலில் ஆடித்தபசு கொடியேற்றம் கோலாகலம்!

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு கொடியேற்றம் கோலாகலம்!

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் நேற்று அரியும், சிவனும் ஒன்று என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலும் ஒன்று. இங்கு சங்கரலிங்கசுவாமி, கோமதிஅம்பாள் சமேதரராக இருந்து அருள்பாலித்து வருகின்றனர். முன்னொரு காலத்தில் சிவன், விஷ்ணு இருவரில் யார் பெரியவர் என்று பக்தர்களிடையே சர்ச்சை ஏற்பட்டது. இந்த சர்ச்சை பக்தர்களிடையே மோதலாகவும் மாறியது. இதனால் மனம் வருந்திய அன்னை கோமதி, சிவன், விஷ்ணு இருவரும் ஒன்று பக்தர்களுக்கு காட்சி அளிக்க வேண்டும் என்று சங்கரலிங்கசுவாமிக்கு கோரிக்கை வைத்தார். அம்பாளின் கோரிக்கையை ஏற்ற சுவாமி அம்பாளை ஒற்றைக்காலில் தபசு இருக்க வேண்டும் என்று கூறினார். தபசு இருந்த அம்பாளுக்கு சங்கரலிங்கசுவாமி, “அரியும், சிவனும் ஒன்று என்ற ஒப்பற்ற தத்துவத்தை விளக்கும் பொருட்டு தனது உடலின் ஒரு பகுதியை சிவனாகவும், மற்றொரு பகுதியை விஷ்ணுவாகவும் மாற்றி சங்கரநாராயணராக காட்சி கொடுத்தார். இந்த அரிய நிகழ்ச்சி தான் ஆண்டுதோறும் “ஆடித்தபசு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டுக்கான ஆடித்தபசு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு திருவனந்தல் நடந்தது. பின்னர் கொடிபட்டத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து ரதவீதிகளில் கொடிபட்டம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. காலை 7.36 மணிக்கு கோமதிஅம்மன் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் திருவிழாவிற்கான கொடியை சரவணன்பட்டர் ஏற்றினார். கொடிமரத்தில் தர்ப்பைபுல் மற்றும் பட்டுத்துணி சுற்றப்பட்டது. கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை பாடினர். தொடர்ந்து சிறப்பு தீபாராதனையான “சோடச தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !