உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள்கோவில் கும்பாபிஷேகம்

வரதராஜ பெருமாள்கோவில் கும்பாபிஷேகம்

சேந்தமங்கலம்: கீழ்சாத்தம்பூர் விநாயகர், மாரியம்மன், வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர்.நாமக்கல் அடுத்த, கீழ்சாத்தம்பூரில், விநாயகர், மாரியம்மன், வரதராஜ பெருமாள் கோவில் திருப்பணி, மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணி முடிவடைந்ததை தொடர்ந்து, கோவில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது. கடந்த, 11ம் தேதி, அதிகாலை கணபதி ஹோமத்துடன் விழா துவங்கியது.தொடர்ந்து, காவிரியில் தீர்த்தம் எடுத்து வருதல், புண்யாக வாசனம், யஜமான சங்கல்பம், கும்பலங்காரம், திருமுறை பாராணயம், மூர்த்தி மற்றும் மூலமந்திர ஹோமங்கள், பூர்ணாகுதி, பிரசாதம் வழங்குதல்போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று முன்தினம் அதிகாலை, 3 மணிக்கு, நான்காம் காலயாக பூஜை, காயத்ரி ஹோமம், காலை, 5 மணிக்கு, கடம் புறப்பாடு, விமானம் மற்றும் மூலஸ்தானத்துக்கு மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து அபிஷேகம், ஸ்வாமி தரிசனம், பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது.சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டுச் சென்றனர். விழாவில், பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை, தர்மகர்த்தா மணி, திருப்பணிக்குழுத் தலைவர், உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !