அழகர்கோவில் ஆடித் தேரோட்டம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்!
அழகர்கோவில்: அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடித் தேரோட்டத்தில் பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர். இக்கோயிலில் ஆண்டு தோறும் நடக்கும் ஆடித் திருவிழா, ஜூலை 14ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் சுந்தரராஜ பெருமாள் தேரில் எழுந்தருளினார். காலை 9.25 மணிக்கு, பக்தர்கள் "கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர். காலை 11 மணிக்கு நிலைக்கு வந்தது. இரவு 7 மணிக்கு பூப்பல்லக்கில் புறப்பட்ட பெருமாள், தேரோடிய பாதையில் வலம் வந்தார்.
ராஜகோபுரத்தில் உள்ள 18ம் படி கருப்பணசாமிக்கு, மதுரை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சந்தன குடம் எடுத்து வந்து நேர்த்திக் கடன் செய்தனர். நள்ளிரவு வரை கருப்பண சுவாமிக்கு சந்தன காப்பு நடந்தது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாகம் செய்திருந்தனர். கோட்டை சுவரை ஒட்டி தற்காலிக கழிப்பறைகள் அமைத்திருந்தனர்.