திருத்தணி முருகன் கோவில் உண்டியல் வசூல் ரூ.60 லட்சம்!
திருத்தணி: முருகன் கோவிலில், 28 நாட்களில், பக்தர்கள் உண்டியலில், ரொக்கம் 60.51 லட்சம் ரூபாய், 483 கிராமம் தங்கம் மற்றும் நான்கு கிலோ வெள்ளியும் காணிக்கை அளித்துள்ளனர். திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, மூலவரை தரிசித்துவிட்டு செல்கின்றனர். பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற, மலைக்கோவில் வளாகத்தில் உள்ள உண்டிகளில், ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். கடந்த மாதம், 26ம் தேதி முதல், இம்மாதம், 22ம் தேதி வரை, பக்தர்கள் அளித்த காணிக்கையை, கோவில் தக்கார் ஜெய்சங்கர், ஆணையர் (பொறுப்பு) திருமகள் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. மலைக்கோவிலில் உள்ள வள்ளி மண்டபத்தில், 100க்கும் மேற்பட்ட கோவில் ஊழியர்களால், பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் என, தனித்தனியாக பிரித்து இரு நாட்கள் எண்ணப்பட்டது. இதில், 60.51 லட்சம் ரூபாய், 483 கிராமம் தங்கம், நான்கு கிலோ வெள்ளி கிடைத்துள்ளது.