உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி பிரம்மோற்சவ விழா: தயார் நிலையில் 4 லட்சம் லட்டுகள்!

திருப்பதி பிரம்மோற்சவ விழா: தயார் நிலையில் 4 லட்சம் லட்டுகள்!

திருப்பதி: திருப்பதி பிரம்மோற்சவ சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. திருமலையில் உள்ள அன்னமையா பவனில், துணை செயல் அதிகாரி சீனிவாச ராஜு தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திருமலையில், அக்டோபர், 5ம் தேதி முதல், 13ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அக்., 5ம் தேதி - கொடியேற்றம்; 9ம் தேதி - கருட சேவை; 10ம் தேதி - தங்கத் தேர்; 12ம் தேதி - ரதோற்சவம்; 13ம் தேதி - தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. பிரம்மோற்சவத்திற்காக, ஆந்திர அரசின் சார்பில், பட்டு வஸ்திரம், அக்., 5ம் தேதி சமர்ப்பிக்கப்படுகிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, ஆகஸ்ட், 16ம் தேதி முதல் செப்டம்பர், 14ம் தேதி வரை திருக்குளத்தை சுத்தம் செய்யும் பணி நடைபெறுவதால், அச்சமயம், குளத்தில் குளிக்க, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 31ம் தேதி ஆலோசனை: பாதுகாப்பை மேலும் பலப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, கலெக்டர், எஸ்.பி., தேவஸ்தான செயல் அதிகாரி ஆகியோர் வரும், 31ம் தேதி ஆலோசிக்க உள்ளனர். இந்த ஆண்டு அதிகளவில் பக்தர்கள் வரக்கூடும் என்பதால், சுகாதாரத்துறை சார்பில், 500 ஊழியர்களும், ஸ்ரீவாரி சேவைக்கு, 4,000 பக்தர்கள் வரையும் அனுமதிக்கப்படுவர். டாக்டர்களும் சேவை செய்ய விரும்பினால், திருமலையில் அமைக்கப்படும், ஏழு முதலுதவி மையங்களில் சேவை செய்யலாம். கருட சேவை நடைபெறும், அக்., 8ம் தேதி இரவு முதல், 10ம் தேதி காலை வரை, திருமலையில், வாகனங்களுக்கு அனுமதியில்லை. மேலும், பக்தர்கள் அதிகளவில் வருவதால், கூடுதலாக, மூன்று தொலைபேசி டவர்கள் அமைக்கப்படும். திருமலையில் இருந்து திருப்பதிக்கு இறங்கும் முதல் மலைப்பாதையில், 18 வேகத் தடைகள் அமைக்கப்படும். பிரம்மோற்சவ சமயத்தில், இணைய தள முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது. நன்கொடையாளர், ஐந்து நாட்களுக்கு முன்பே, பதிவு செய்தால் தான், தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும். ஐந்து கூடுதல் மையங்கள்: பேருந்து முன்பதிவுக்காக, ஆர்.டி.சி., சார்பில், ஐந்து கூடுதல் மையங்கள் திறக்கப்படும். திருமலையில் நடைபெறும் வாகன சேவை குறித்த கையேடு பக்தர்களுக்கு வழங்கப்படும். பிரம்மோற்சவத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்க, நான்கு லட்சம் லட்டுகள் கையிருப்பில் வைக்க ஏற்பாடு செய்யப்படும். உள்ளூர்வாசிகள், திருமலைக்கு வர, பேருந்து நிலையம் வரை இலவச பஸ் வசதி செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !