ஆடியில் ஆடி அமர்ந்தாள் அம்பிகை; ஆர்.கே.பேட்டையில் பக்தி பரவசம்
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை சுற்று வட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சந்திரவிலாசபுரம் சந்திரவிலாசபுரம், பொன்னியம்மன் கோவிலில், நேற்று காலை, பால்குடம் ஊர்வலம் நடந்தது. ஆடி மாதத்தில், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடத்தப்படுகிறது. நேற்று காலை, 10:00 மணிக்கு, ஊரில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து, 108 பால் குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பொன்னியம்மனுக்கு, பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அம்மையார்குப்பம், காமாட்சியம்மன் கோவிலில், 27ம் ஆண்டு குத்துவிளக்கு பூஜை நடந்தது. இதில், 1,008 குத்துவிளக்கு ஏற்றப்பட்டு, முப்பெரும் தேவியருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மாலை, காமாட்சியம்மன் கோவிலில், லட்சுமிதேவி, சக்தி வடிவில் காமாட்சி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவியருக்கு, 1,008 குத்துவிளக்கு ஏற்றி அர்ச்சனை செய்யப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு, அம்மனுக்கு முன்பாக, பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி, 1,008 நாமாவளியை உச்சரித்து அர்ச்சனை செய்தனர். இதேபோல், சத்தியம்மன் கோவிலிலும் விளக்கு பூஜை நடந்தது. இரவு அம்மன் வீதியுலா நடந்தது. பழப் பந்தலில் உலகாத்தம்மன் நாகபூண்டி, நாகேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள உலகாத்தம்மன் கோவிலில், நேற்று முன்தினம் ஆடிப் பெருவிழா நடந்தது. இதில், கோவில் வளாகம் முழுவதும் பழங்கள் மற்றும் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டது. நேற்று காலை, அம்மன் வாணவேடிக்கையுடன் வீதியுலா வந்தார். செங்குந்தர் குல வெள்ளாத்தூர் மரபினரின் குலதெய்வமான வெள்ளாத்தூர் அம்மன் கோவிலில், இன்று, 1,008 பால்குட ஊர்வலம் நடக்கிறது. பம்பை, உடுக்கை ஒலிக்க அம்மனுக்கு பாலாபிஷேகம் நடக்கிறது.