எல்லையம்மனுக்கு தீச்சட்டி ஆதிபராசக்திக்கு கஞ்சி கலயம்
ஆர்.கே.பேட்டை:ஆடிப்பூரம் திருவிழாவையொட்டி, எல்லையம்மனுக்கு தீச்சட்டி ஊர்வலமும், கங்கையம்மனுக்கு கஞ்சி கலயமும் பக்தர்கள் சுமந்து சென்றனர். ஆர்.கே.பேட்டை அடுத்த, அம்மையார்குப்பம் ஆதிபராசக்தியம்மன் கோவிலில், பக்தர்கள் நேற்று, கஞ்சி கலயம் சுமந்து சென்றனர். காலை, 9:00 மணிக்கு, திரவுபதியம்மன் கோவிலில் இருந்து, 1,008 கஞ்சி கலயத்தை சுமந்தபடி, பெண்கள் ஊர்வலமாக புறப்பட்டனர். பொன்னியம்மன், கங்கையம்மன், சத்தியம்மன், படவேட்டம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் சென்று வழிபட்டனர். பின், அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலை, ஊர்வலம் சென்றடைந்தது. அங்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு, கலயத்தில் இருந்த கஞ்சியை பக்தர்கள் சமர்ப்பித்தனர். பின், வேப்பிலை கலந்த அம்மன் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை, ஆதிபராசக்தி அம்மன் ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர். இதேபோல், ராஜாநகரம் (கிழக்கு) கிராமத்தில், எல்லையம்மனுக்கு பக்தர்கள் தீச்சட்டி ஏந்திச் சென்றனர்.திரவுபதியம்மன் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் புறப்பட்ட பக்தர்கள், பள்ளிப்பட்டு சாலையில் உள்ள எல்லையம்மன் கோவிலுக்கு, தீச்சட்டி ஏந்திச் சென்றனர்.ஆடிப்பூரம் விழாவையொட்டி, மூன்று நாட்களாக, செவ்வாடை உடுத்திய பக்தர்கள், கோவில் வளாகத்தில் விரதம் மேற்கொண்டிருந்தனர். நேற்று மாலை, விரதத்தை நிறைவு செய்தனர்.