உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத் தொழு பட்டத்து காளைக்கு அபிஷேக ஆராதனை

நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத் தொழு பட்டத்து காளைக்கு அபிஷேக ஆராதனை

கம்பம்: கம்பம் நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத் தொழுவில் பொதுமக்கள் பொங்கல் வைத்து பட்டத்து காளையை வழிபட்டனர்.


பசுக்களை தெய்வங்களாக வழிபடும் ஒக்கலிக கவுடர் சமுதாயத்திற்கு சொந்தமானது கம்பம் நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத் தொழு. இங்கு கருவறையில் சுவாமி விக்ரங்கள் கிடையாது. கம்பம், ஒடைப்பட்டி, சிலமலை, காமயகவுண்டன்பட்டி , புதுப்பட்டி, கூடலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் இங்கு வருவார்கள். இந்த கோயிலில் உள்ள பட்டத்துகாளைக்கு மட்டுமே பூஜை நடைபெறும். மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஒக்கலிகர் சமுதாயத்தின் சார்பில் இன்று பட்டத்துக்காரர், கோடியப்பனார், பூஜாரி, பெரிய தன வீட்டுக்காரர் தலைமையில், ஸ்தம்பத்திற்கு பூஜை நடத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட பட்டத்து காளைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.


முன்னதாக பன்னீரும், சந்தனமும் கலந்த தண்ணீரில் பட்டத்துக் காளையை குளிக்க வைத்து பட்டாடை போர்த்தப்பட்டது. கோயில் வளாகத்தில் திரண்ட பொதுமக்கள், பொங்கல் வைத்து பட்டத்து காளையை வழிபட்டனர். கருவறையில் ஸ்தம்பத்திற்கு நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று வழிபட்டனர். கோசாலையில் உள்ள காளை மாடுகளுக்கு மக்கள் பசுந்தீவனம் வழங்கி மகிழ்ந்தனர். கோயில் வளாகத்தில் உள்ள குலக்கோயில்களில் பொங்கல் வைத்து வழிபட்டனர். நூற்றுக்கணக்கான மாலை கோயில்கள் இந்த வளாகத்தில் உள்ளதும் சிறப்பாகும். மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து ஒக்கலிக கவுடர் சமுதாயத்தை சேர்ந்தவர்களும் மற்றும் அனைத்து சமூகத்தினரும் திரளாக வந்திருந்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கத்தினர் செய்திருந்தனர். அனைத்து சமூகத்தினரும் தை 2 ல் இப்பகுதியில் பிறக்கும் நாட்டு காளை மாட்டு கன்றுகளை, இந்த கோயிலிற்கு தானமாக வழங்குவது வழக்கமாகும் அது போன்று நேற்றும் கன்றுகள் தானமாக வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !