உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேட்டுப்பாளையம் அருகே பாரம்பரிய மாட்டுப் பொங்கல்

மேட்டுப்பாளையம் அருகே பாரம்பரிய மாட்டுப் பொங்கல்

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே பாரம்பரிய முறையில், மாடுகள் பட்டி மிதிக்கும் மாட்டுப் பொங்கல் நடந்தது.


விவசாயிகள், விளை நிலத்துக்கும், விளை பொருட்களுக்கும், தாங்கள் வளர்க்கும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், தைப்பொங்கல் விழா கொண்டாடுகின்றனர். தை மாதம் முதல் நாள் இயற்கைக்கு நன்றி செலுத்தும் வகையில், சூரியப் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரண்டாம் நாள், மாட்டுப் பொங்கல் வைப்பது வழக்கம். அந்த வகையில் இன்று மேட்டுப்பாளையம், சிறுமுகை, காரமடை பகுதிகளில், விவசாயிகள் மாட்டுப் பொங்கல் விழாவை கொண்டாடினர். மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குத்தாரிபாளையத்தில், வேலுசாமி விவசாயி பாரம்பரிய முறைப்படி மாட்டுப்பொங்கல் வைத்தார். வீட்டு வாசலில் சாணத்தால் நான்கு பாத்தி கட்டினார். அதில் தண்ணீரை ஊற்றி பூக்களை தூவினார். பெண்கள் வாசலில் வண்ண கோலமிட்டு பொங்கல் வைத்தனர். பின்பு பசு மாடுகளை அழைத்து வந்து, பாத்தி அருகே நிறுத்தி பூஜை செய்து, பொங்கல் மற்றும் வாழைப்பழங்களை, மாடுகளுக்கு குடும்பத்தினர் வழங்கினர். அப்போது பட்டி பெருக வேண்டும், பால் சோறு பொங்கணும் என்று முன்னோர்கள் கூறிய, அந்த வார்த்தைகளை கூறி, குடும்பத்தினர் பசுமாடுகளை பட்டி பாத்தி வழியாக மிதிக்கச் செய்து அழைத்து சென்றனர். இந்த விழாவில் முன்னாள் ஆசிரியர் முருகநாதன், டாக்டர் குருசாமி, வேலுசாமி குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். பத்மாவதி அனைவருக்கும் பொங்கல் வழங்கினார். இதேபோன்று ஜடயம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலாங்கொம்பு அருகே காலனூரில், விவசாய ரங்கசாமி பசு மாடுகளை குளிக்கச் செய்து, பொங்கல் வைத்து பசு மாடுகளுக்கு, பொங்கல், பழங்களை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !