உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி அவிட்ட விரத முறையும் பலனும்!

ஆவணி அவிட்ட விரத முறையும் பலனும்!

ஆவணி அவிட்டம்: ஆவணி மாத பவுர்ணமியை ஒட்டி வரும் அவிட்ட நட்சத்திரத்தில் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வேளையில் முறையாக காயத்ரி உபதேசம் பெற்றவர்கள், தங்களுடைய பழைய பூணூலை எடுத்துவிட்டு புதிய பூணூலை அணிந்து கொள்வர். திருமணம் ஆகாதவர் ஒரு முடியையும் (ஒரு பூணூல்), திருமணம் ஆனவர் இரண்டு முடி (இரண்டு பூணூல்), திருமணம் ஆனபின் தந்தையை இழந்தவர் மூன்று முடிகளையும் (மூன்று பூணூல்) அணிந்து கொள்வர். இவ்வாறு பூணூல் அணிபவர்கள் தினமும் காலை, மதியம், மாலை மூன்று வேளையும் காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்.

பூணூல் அணிந்தவர்கள் தினமும் காயத்ரி மந்திரத்தை குறைந்தது 144 முறை காலை, நண்பகல், மாலையில் ஜபித்து வரவேண்டியது கடமை. காயத்ரி மந்திரம் ஜபித்தால் துன்பம், எதிரிபயம் நீங்கும். முகத்திலும், உடலிலும் ஒருவித தேஜஸ் உண்டாகும். பூணூல் அணிந்த அனைவரும் முதலில் தேவர்களுக்கும், பின்னர் ரிஷிகளுக்கும் தர்ப்பணம் (எள்ளும்,நீரும் கலந்து  தாரையாக விடுவது) என்னும் சடங்கைச் செய்கின்றனர்.

விரத முறை: கணபதி பூஜையுடன் இவ்விரதத்தை துவங்கி, புண்யாவாகனம் செய்த பின், பஞ்சகவ்யம் அருந்தி உடல், மனம், இருப்பிடங்களைத் சுத்தமாக்கிக் கொள்ள வேண்டும். இவ்வேளையில் கிழக்கு நுனியாக வாழை இலை போட்டு, அதில் அரிசி பரப்பி 7 கொட்டைப் பாக்குகள் வைத்து, அதில் சப்தரிஷிகளை ஆவாஹனம் செய்து, தீபாராதனை செய்து, நைவேத்தியம் படைக்க வேண்டும். பின், சப்தரிஷிகளை வேண்டி ஹோமம் செய்ய வேண்டும். அதில் அரசு அல்லது புரசு சமித்துக்கள் (குச்சிகள்), சத்துமாவு, நெய், நெல்பொரி ஆகியவற்றை மந்திரம் சொல்லி அக்னியில் இட வேண்டும். பின், புதிய பூணூல் அணிந்து கொள்ள வேண்டும்.இவ்வேளையில் பஞ்சபூதங்களையும் வழிபடலாம்.

திருமணம் ஆகாத ஆண்கள் பூணூலை குருவிற்கும், வயதில் மூத்தோருக்கும் தானமாகத் தரலாம். புதிய பூணூல் அணிந்த அனைவரும் முதலில் தேவர்களுக்கும், பின்னர் ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்கின்றனர். இவர்களில் தந்தையை இழந்தவர்கள் தேவர்களுக்கும், ரிஷிகளுக்கும் தர்ப்பணம் செய்தபிறகு தங்களுடைய பிதுர்களுக்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதற்கு பிறகு குருவிற்கும், வயதில் மூத்தோருக்கும் வெற்றிலை பாக்கு, பழம் மற்றும் அவர்கள் சக்திக்குத் தகுந்தாற்போல் காணிக்கைகளை அளித்து அவர்களின் ஆசிர்வாதம் பெற வேண்டும். பூணூல் அணிந்து வரும் ஆண்களை, பெண்கள் வாசலில் மங்கள ஆரத்தி எடுத்து வரவேற்பர்.

பலன்: இவ்விரதம் இருந்து பூணூல் அணிந்து கொண்டவர்களை செய்பவரை எவ்வித துன்பமும் நெருங்காது. எதிரிகளின் தொல்லை குறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !