கிருஷ்ணரின் பிறந்தநாள் கொண்டாட்டம்!
கிருஷ்ணரின் தந்தை வசுதேவர், தன் குழந்தையைக் கம்சனிடம் இருந்து காப்பாற்றும் வகையில், ஆயர்பாடியில் உள்ள நந்தகோபர் வீட்டில் விட்டு வந்தார். இதையறிந்த ஆயர்கள், கிருஷ்ணரை தங்கள் தலைவர் வீட்டில் பிறந்த குழந்தையாகக் கருதி, வாத்தியங்கள் இசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அந்தணர்கள் வேத மந்திரங்களை ஓதினர். பசுக்கொட்டில்களிலும், வீதிகளிலும் கோபியர்கள் மாக்கோலம் இட்டனர். மஞ்சள், செஞ்சூரணத்தால் சிலர் சித்திரகோலம் இட்டனர். வாசனை திரவியங்களைப் பூசியும், ஒருவருக்கொருவர் பன்னீர் தெளித்தும் மகிழ்ந்தனர். லட்சுமியின் அம்சமான பசுக்களுக்கு மலர் மாலைகளை சூட்டினர். வீட்டுவாசலில் மலர் அலங்காரம் செய்தனர். பலவிதமான காதணி, கழுத்தணி, முத்துக்கம்மல், அட்டிகைகளை அணிந்து கொண்டு குழந்தையைக் காண நந்தகோபரின் வீட்டுக்குச் சென்றனர். கிருஷ்ணரைக் கண்டு, வசுதேவ் கிருஷ்ணா! எங்களின் அன்புச் செல்வமே! நீ நீடுழி வாழ்ந்து எங்களைக் காத்தருள வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். நந்தகோபரும், யசோதையும் பொன், பொருள், ஆடை, பசுக்கள் என பலவித தானங்களை மக்களுக்கு அளித்து கண்ணனின் வரவைக் கொண்டாடினர்.
அஷ்டமியன்று பவுர்ணமி: இதென்ன அதிசயம்! அஷ்டமி எட்டாவது திதியாயிற்றே! அதிலும் தேய்பிறை அஷ்டமியன்று கிருஷ்ணர் பிறந்தாரே! அந்த நாள் எப்படி பவுர்ணமியாக முடியும்! இதோ! விளக்கம்...! கிருஷ்ணர் பிறந்தபோது நிலவிய கிரகநிலை பற்றிய குறிப்பு கமானிக்யா என்ற ஜோதிட நூலில் உள்ளது.அன்று வானமண்டலத்தில் எல்லா கிரகங்களும் சுபமான இடத்தில் இருந்தன. அந்நாள், தேய்பிறை அஷ்டமி திதியாக இருந்தாலும், கிருஷ்ணர் சந்திர வம்சத்தைச் சேர்ந்தவர் என்பதால் வானில் அன்று உதித்த நிலவு பவுர்ணமி போல் பிரகாசித்தது. நான்கு கைகள், கைகளில் சங்கு, சக்கரம், கதாயுதம், தாமரை ஏந்தி தெய்வாம்சத்துடன் அற்புதமான குழந்தையாக அவர் காட்சியளித்தார். கார்மேக வண்ணத்தில் இருந்த கிருஷ்ணர், மஞ்சள் பட்டாடையும் சில ஆபரணங்களும் அணிந்து காட்சியளித்தார். அவரைப் பெற்ற தாய் தேவகியும், ஒரு தேவதையைப் போல் ஜொலித்தாள்.
ருக்மணி நேசித்த கண்ணன்: கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள கிருஷ்ணரின் விக்கிரகம், ருக்மணியால் பூஜிக்கப்பட்ட சிறப்புபெற்றது. ஒருமுறை ருக்மணிக்கு, கிருஷ்ணர் பாலகனாக இருந்தபோது எப்படி இருந்தார் என்பதைக் காணும் ஆவல் ஏற்பட்டது. தனது ஆசையை தேவசிற்பியான விஸ்வகர்மாவிடம் கூறினாள். விஸ்வகர்மாவும் சாளக்ராம கல்லில், வலது கையில் தயிர் மத்தும், இடது கையில் வெண்ணெயும் வைத்த நிலையில் பாலகிருஷ்ணன் விக்கிரகத்தை உருவாக்கினார். அதை ஆசையோடு வாங்கிய ருக்மணி, அதன் அழகில் மெய்மறந்து போனாள். அந்த விக்கிரகத்தை தன்னுடனேயே வைத்திருந்து பூஜித்து வந்தாள். ருக்மணிக்கு பின் அர்ஜுனன் அந்த விக்கிரகத்தை பூஜித்தான் என்பது ஐதீகம். இக்கோயிலில் உள்ள மத்வ புஷ்கரணி அதிசயம் நிறைந்த தீர்த்தக்குளமாக திகழ்கிறது. ஆண்டுக்கு ஒருமுறை கங்கை தீர்த்தம் இதில் கலப்பதாக ஐதீகம். இந்த புஷ்கரணியில் இருந்து தீர்த்தம் எடுத்துதான் கிருஷ்ணர் விக்கிரகத்துக்கு தினமும் அபிஷேகம் செய்கிறார்கள். இந்த தீர்த்தத்துக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. அதாவது, மத்வ தீர்த்தத்தின் பெயரைச் சொன்னாலே புண்ணியம் வந்து சேரும் என்பதுதான் அது!
சின்னக்கண்ணன் அழைக்கிறான்: துவாரகையில் கோயில்கொண்டிருக்கும் கண்ணனுக்கு துவாரகாதீசன் என்று திருப்பெயர். ஜகத் மந்திர் என அழைக்கப்படும் இந்த ஆலயத்தின் பிரதான வாசலுக்கு, சுவர்க்க துவாரம் என்று பெயர். எந்த நேரமும் திறந்திருக்கும் இந்த வாசலைத் தாண்டிச் சென்றால், மோட்ச துவாரம் எனும் வாயில், அதையும் கடந்து சென்றால் கண்ணனின் தரிசனம் கிடைக்கும். இந்த இரண்டு வாயில்களுக்கும் இடையே தேவகி, பலராமன், ராதை, சத்யபாமா, லட்சுமி, சரஸ்வதி, காயத்ரி ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. ருக்மிணிதேவிக்குத் தனிக்கோயில் உள்ளது.
உத்தரப்பிரதேசம்-மதுரா மாவட்டத்தில் உள்ள பிருந்தாவனத்தில். கிருஷ்ண பக்தர்கள் தரிசிக்கவேண்டிய இடம் வம்சீவட். கண்ணன் தனது புல்லாங்குழல் இசையால் கோபியரைக் கவர்ந்த இடம் இது. வம்சீ என்றால் புல்லாங்குழல். வட என்றால் ஆலமரம் என்று பொருள். இங்கு (பிருந்தாவனம்) அருள்பாலிக்கும் மூலவரின் திருநாமம் வம்சீவட விஹாரி. கண்ணன் பல வடிவங்கள் எடுத்து, கோபியர் ஒவ்வொருவருடனும் லீலை புரிவதைச் சித்திரிக்கும் ஓவியங்களையும் இந்தக் கோயிலில் தரிசிக்கலாம், மேலும், நான்கு புறமும் வரிசைப்படி ஸ்ரீராமானுஜர், மத்வர், விஷ்ணு சுவாமி ஆகியோரின் விக்கிரகங்களையும் சேவிக்க முடியும்.
மதுராவில் தேவகி- வசுதேவருக்கு 8-வது மகனாக கிருஷ்ணன் அவதரித்த இடம் சிறைச்சாலை. தற்போது அந்த இடத்துக்கு மேல் கத்ரகேஷப் தேவ் எனும் கிருஷ்ணர் கோயில் எழுப்பப்பட்டுள்ளது.
நாகர்கோவிலுக்கு அருகே உள்ள ஊர் அழகியபாண்டியபுரம். இங்குள்ள அருள்மிகு அழகிய நம்பிகோயிலில் அருளும் குழந்தைக் கண்ணன் தூங்கிக்கொண்டிருப்பதாக ஐதீகம். அவரது தூக்கம் கலையாமல் இருக்கும் பொருட்டு நாதஸ்வரம், தவில் போன்ற வாத்தியங்கள் இங்கே இசைக்கப்படுவது இல்லையாம். பூஜையின்போது புல்லாங்குழல் இசை மட்டும் ஒலிக்கப்படுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் வேணுகோபாலன் ஆலயத்தில் அருள்புரியும் கண்ணனின் விக்கிரகம், நேபாள நாட்டில் பாயும் கண்டகி நதியில் கிடைக்கும் சாளக்ராமக் கல்லினால் ஆனது.
கேரள மாநலம் குருவாயூரில் எழுந்தருளியிருக்கும் உன்னிகிருஷ்ணன், பாதாள அஞ்சனம் மற்றும் மூலிகையினால் உருவானவர்.
சென்னை மயிலாப்பூரில் ரங்கா சாலையில் கோயில் கொண்டுள்ள கண்ணனின் விக்கிரகம், தங்கத்தை உரசிப் பார்க்கும் டச்-ஸ்டோன் என்று சொல்லப்படும் ஒரு வகைக் கல்லினால் ஆனது.
ராமநாதபுரம் திருப்புல்லாணி ஆதிஜகந்நாதர் கோயிலில் எட்டு யானைகளுடனும், எட்டு நாகங்களுடனும் ஆதிசேஷன் குடைபிடிக்க நின்ற கோலத்தில் சேவை சாதிக்கிறார் சந்தானகோபாலன். தசரத மகாராஜா புத்திர காமேஷ்டி யாகம் செய்த திருத்தலம் இது என்கிறது ஸ்தலபுராணம்.
குருவாயூர் கிருஷ்ணன், அம்பலப்புழா கிருஷ்ணன் மற்றும் திருப்பணித்துரா வேணுகோபால ஸ்வாமி ஆகிய மூன்று மூலவர்களுமே மகாவிஷ்ணுவே உருவாக்கியவர்கள். இந்த மூன்று கோயில்களிலும் பிரசாதம், பால் பாயசம்தான்!
மோட்ச துவாரகையில் உள்ள கிருஷ்ண பகவானுக்கு, மணிக்கு ஒருமுறை உடை மாற்றுகிறார்கள். ஒருநாளில் 17 முறை நைவேத்தியம் செய்கின்றனர்.
குஜராத்-பேட் துவாரகையில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் தினமும் ஒரு அதிசயம் நடக்கிறது. அந்தக் கோயில் குருக்கள் காலில் தண்டை அணிந்து, சேலை கட்டிக்கொண்டு கிருஷ்ணனுக்குப் பூஜை செய்வது வழக்கம். வேறெங்கும் காண்பதற்கரிய வைபவம் இது. யமுனையின் ஸ்நான கட்டமான பிரும்மாண்ட கட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. கோபிகைகளின் உடைகளை மரக்கிளைகளில் ஒளித்து வைத்து கிருஷ்ணன் அருளாடல் புரிந்தது இங்குதான். பிறகு, அவர்களுக்கு ஞானோபதேசம் செய்தான். இந்த இடத்தில்தான் கிருஷ்ணன் மண்ணை உண்டான். யசோதை, கண்ணன் திருவாயைத் திறந்து பார்த்தபோது, பிரம்மாண்டத்தை அவள் அங்கு கண்டாள். அதனால் தான் இந்தத் துறைக்கு பிரம்மாண்ட கட்டம் என்று பெயர் வந்தது.