ஓணம் இன்று துவக்கம்: செப்.16 ல் திருவோண கொண்டாட்டம்!
நாகர்கோவில்: திருவோண பண்டிகையின் முன்னோடியாக 10 நாள் ஓணம் கொண்டாட்டம் இன்று துவங்குகிறது. ஓணம் பண்டிகையை கேரள மக்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர். காணம் விற்றாவது ஓணம் கொண்டாடு என்பது ஓணம் பற்றிய பழமொழி. காணம் என்பது சிறிய தானியம். அதை விற்றாவது சிறிய அளவிலாவது ஓணம் கொண்டாட வேண்டும் என்பதுதான் பழமொழியின் பொருள். கேரளாவில் குறுநில மன்னனாக, வாய்மை தவறாமல் ஆட்சி செய்து வந்த மகாபலியை சோதிக்க விரும்பிய விஷ்ணு பகவான் வாமன அவதாரம் எடுத்து மன்னனிடம் சென்று மூன்று அடி நிலம் கேட்டார். தருகிறேன் என்று மன்னன் சொன்னதும் மலையாக வளர்ந்த விஷ்ணு முதல் அடியில் பூமி, இரண்டாவது அடியில் ஆகாயத்தை அளந்து விட்டு மூன்றாவது அடிக்கு நிலம் கேட்ட போது தனது தலையை கொடுத்து,தனது வாக்குறுதியை காப்பாற்றினார் மகாபலி. இந்த நேரத்தில் பகவானிடம் கேட்டு பெற்ற வரத்தின் படி ஆவணி திருவோண நாளில் மக்களை மகாபலி காண வருவதாக நம்பப்படுகிறது. இன்று அஸ்தம் பிறக்கிறது, இன்று முதல் வீடுகளில் மலர் கோலங்கள் மக்கள் அமைப்பர். ஓணம் கொண்டாட்டம் பத்து நாட்கள் நடக்கும். இதனால் பூ மார்க்கெட்டுகளில் வியாபாரம் விறுவிறுப்படைந்துள்ளது.