சுந்தர விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
பள்ளிப்பட்டு:சுந்தர விநாயகர் கோவிலின் மகா கும்பாபிஷேகத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். பள்ளிப்பட்டு ஒன்றியம், பாண்டறவேடு கிராமத்தில், 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், விநாயகர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா, நேற்று முன்தினம், கணபதி ஹோமத்துடன் துவங்கியது. விழாவை ஓட்டி கோவில் வளாகத்தில், மூன்று யாகசாலைகள், 108 கலசங்கள் அமைத்து, வாஸ்து சாந்தி, கோ பூஜை மற்றும் மூன்று கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. நேற்று, காலை, 7:00 மணிக்கு நான்காம் கால பூஜை நடந்தது. காலை, 8:00 மணிக்கு கலசங்கள் ஊர்வலமாக புறப்பட்டு, புதியதாக அமைக்கப்பட்ட விமானத்தின் மீது கலசநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அங்கு கூடியிருந்த, பக்தர்கள் மீது, கலச நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. மதியம், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு, பெண்கள் பொங்கல் வைத்து வழிப்பட்டனர். மாலை, 6:00 மணிக்கு, 100க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜை நடத்தினர். தொடர்ந்து, உற்சவர் விநாயகர், திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.