விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாணவர்கள் உழவாரப் பணி!
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில், பாத்திமா மெட்ரிக் பள்ளி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் உழவாரப் பணி செய்தனர். விருத்தாசலம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் என்.எஸ்.எஸ்., முகாம் மணலூரில் கடந்த 22ம் தேதி துவங்கியது. துவக்க விழாவிற்கு, பள்ளி முதல்வர் அருள்மேரி தலைமை தாங்கினார். ஆசிரியர் பாத்திமா வரவேற்றார். என்.எஸ்.எஸ்., மாவட்ட அதிகாரி திருமுகம், முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து, மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் நேற்று முன்தினம் உழவாரப் பணி, மாலை "மாணவர்களும், சமுதாயமும் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நடந்தது. விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் நேற்று உழவாரப் பணி, மாலை, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் சாலை விதிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, தமிழாசிரியர் ராஜேஷ் தலைமையில் "மாணவர்களின் மனநிலை தலைப்பில் அன்றைய மகிழ்ச்சியா, எதிர்கால வளமா என்ற பட்டிமன்றம் நடந்தது.