காந்தி கோவிலில் சிறப்பு பூஜை: பொதுமக்கள் தரிசனம்!
கோபிசெட்டிபாளையம்: காந்தி பிறந்த தினத்தை முன்னிட்டு, கவுந்தபாடி காந்தி கோவிலில், காந்தி சிலைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது. ஈரோடு மாவட்டம், கவுந்தபாடி அருகே செந்தாம்பாளையத்தில், தேசப்பிதா மகாத்மா காந்தி அறக்கட்டளை சார்பில், 1997ல் காந்தி, கஸ்தூரிபாய் கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலில் காந்தி, கஸ்தூரிபாய் ஆகியோருக்கு தனித்தனியாக சிலைகள் அமைக்கப்பட்டு, தினமும் பூஜை செய்யப்படுகிறது. காந்தி பிறந்த அக்., 2ம் தேதியான நேற்று, இக்கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பெருந்தலையூர், பவானி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், பால், பஞ்சாமிர்தம், இளநீர், எலுமிச்சை, தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட, ஒன்பது வகையான திரவியங்களைக் கொண்டு, அபிஷேகம், ஆராதனை நடந்தன. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காந்தி கோவிலில், பல பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பள்ளி குழந்தைகள் ஏராளமானவர்கள் வந்து தரிசனம் செய்து, மரியாதை செலுத்தினர். அதேநேரம், காந்திக்கு என்று உள்ள ஒரே கோவிலில், காந்தி ஜெயந்தியான நேற்று, காங்கிரஸ் பிரமுகர்கள் உட்பட எந்த அரசியல் கட்சி பிரமுகர்களும் வந்து, காந்தியை வணங்கி பெருமை சேர்க்கவில்லை, என்பது குறிப்பிடத்தக்கது.