திருப்பதி பிரமோற்சவம்: சப்தகிரி ரயிலில் கூடுதல் பெட்டிகள்!
சென்னை: திருப்பதி பிரமோற்சவத்தையொட்டி, சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்படுகின்றன. திருப்பதி பிரமோற்சவ விழாவிற்கு செல்லும் பக்தர்களுக்கு ஏதுவாக, திருப்பதி சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும், சப்தகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில்,10ம் தேதியில் இருந்து,13ம் தேதி வரை, ஒரு, "ஏசி சேர் கார் பெட்டியும், இரண்டு, இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளும் கூடுதலாக இணைக்கப்படுகின்றன. கவுஹாத்தி (அசாம்) சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில், வரும், 4ம் தேதியில் இருந்து, டிச., 1ம் தேதி வரை, "ஏசி மூன்றடுக்கு பெட்டி ஒன்று கூடுதலாக இணைக்கப்படுகிறது. திப்ரூகார் கன்னியாகுமரி இடையே இயக்கப்படும், வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில், வரும், 5ம் தேதியில் இருந்து டிச.,7ம் தேதி வரை, ஒரு, இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைத்து இயக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரணி அலூர், மோகனூர்: சென்னை எழும்பூர் திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், பக்ரீத் பண்டிகையொட்டி, வரும், 16ம் தேதியில் இருந்து, 20ம் தேதி வரை வழியில் உள்ள வீரணிஅலூர் ரயில் நிலையத்தில், ஒரு நிமிடம் நின்று செல்லும். சென்னை சென்ட்ரல் பழநி இடையே இயக்கப்படும் தினசரி ரயில், வழியில் உள்ள மோகனூரில் சோதனை ரீதியில் ஜூன்,30ம் தேதி வரை, ஒரு நிமிடம் நின்று செல்லும்.