நாடு அமைதி பெற ஆன்மிக கருத்து விதைக்க வேண்டும் : துறவியர் கருத்தரங்கில் வலியுறுத்தல்
பேரூர் : "நாடு அமைதி பெற பிஞ்சு உள்ளங்களில் ஆன்மிக கருத்து விதைக்க வேண்டும் என, மாநில அளவிலான துறவியர் கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது. பேரூர் தமிழ்கல்லூரியில் மாநில அளவிலான துறவியர் கருத்தரங்கம், பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் அருளுரையுடன் துவங்கியது. தொடர்ந்து, "கொலைமறுத்தல் எனும் தலைப்பில் நூல்வெளியீடு விழா நடந்தது. திருக்கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக அடிகளார் பேசுகையில்,""அனைத்து ஊரிலும் தேர்த்திருவிழா சிறப்பாக நடக்க வேண்டும். எல்லா இனத்தவரும் விழாவில், ஒன்றுகூடுவதால், நாட்டில் ஒற்றுமை ஏற்படும். வருமானம் அதிகமுள்ள கோவில்களில் கும்பாபிஷேகம் செய்ய தயாராகும் அற நிலையத்துறை, இடிந்து விழும் நிலையிலுள்ள பழமைவாய்ந்த கோவில்களை புனரமைக்க கண்டு கொள்வதில்லை, என்றார். குமாரசாமி தம்பிரான் பேசுகையில்,""தமிழக அரசுக்கு அக் 5, டாஸ்மாக், அறநிலையத்துறை இரண்டில்தான் அதிக வருமானம் வருகிறது. அக் 5 தொண்டர்களை பயன்படுத்தி, திருக்கோவில், மடங்களை சீர்செய்ய முடியும். தெய்வீகப்பேரவையை மீண்டும் புதுப்பித்து சமயபிரசாரம் மேற்கொள்வது அவசியம். இதன்மூலம், மொழி, மற்றும் ஆன்மிகத்தை வளர்க்க முடியும். திருக்கோவில்களில் தீபாராதனை முடிந்த பின், ஐந்து நிமிடம், ஆன்மிக சான்றோர் சமயம் குறித்த பாடம் படிப்பது அவசியமாக்க வேண்டும். இதனால், சிறுவயது குழந்தைகளிடம் சமயம், மொழி குறித்த உணர்வு வரும் என்றார். சிதம்பரம் மவுன சுந்தரமூர்த்தி சாமி பேசுகையில்,"நாடு அமைதி பெற, பிஞ்சு உள்ளங்களில் சமயக்கருத்தை விதைப்பதோடு, சைவ சமயக்கருத்தை தெள்ளத் தெளிவாக கற்பது அவசியம் என்றார். கன்னியாகுமரியை சேர்ந்த பாலபிரஜாபதி அடிகள் பேசுகையில்,""அறநிலையத்துறை கோவில் மற்றும் அதன் சொத்துக்கள் குறித்த கணக்கெடுப்பை மட்டுமே மேற்கொள்கிறது; இந்து மக்களின் பிரச்னைகள் குறித்து கண்டுகொள்வதில்லை என்றார். சிரவையாதீனம் குமரகுருபர அடிகள் பேசுகையில்,""நாடு விழித்தால் தான் இந்து சமயம் செழிக்கும். எனவே, நமது சமயத்தை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு நமக்குண்டு. கோவில் திருவிழாக்களில் சினிமா கச்சேரிகளை தவிர்ப்பது அவசியம் என்றார். தமிழகத்தின் பல்வேறு மடங்களிலிருந்து 50க்கு மேற்பட்ட துறவிகள் பங்கேற்றனர்.