திருத்துறைப்பூண்டி கோவில்களில் நவராத்திரி சிறப்பு பூஜை கோலாகலம்
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸர் கோவிலில் நவராத்திரியையொட்டி, ஒன்பதாம் நாள் காலை ஸ்வாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மங்களநாயகி பிரஹார வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, கோவில் கலையரங்கில் பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. ஆயுதபூஜையையொட்டி பொய்சொல்லா பிள்ளையார் கோவிலில் காலை, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6 மணிக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடந்தது. நெடும்பலம் மகாமாரியம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு அபிஷேகமும், மாலை 6 மணிக்கு அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரமும் நடந்தது. திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டாரத்திலுள்ள சிங்களாந்தி மணிகண்டேஸ்வரர் கோவில், கள்ளிக்குடி நாகநாதர் ஸ்வாமி கோவில், பேளூர் ஸ்வர்ணபுரீஸ்வரர் கோவில், திருத்துறைப்பூண்டி வரதராஜ பெருமாள் ஸ்வாமி கோவில் உள்ளிட்ட கோவில்களில், ஆயுதபூஜை, நவராத்திரி சிறப்பு வழிபாடு நடந்தது.