கடையம் பகுதிகளில் வீதியெங்கும் உப்புக்கண்ட தோரணங்கள்!
ஆழ்வார்குறிச்சி: கடையம் சுற்று வட்டாரத்தில் நபிகளின் சொல்படி வீதியெங்கும் தொங்கும் உப்புக்கண்ட தோரணங்கள். குரானில் நபிகள் 7வது அத்தியாயம் 31வது வசனத்தில் "உண்ணுங்கள், பருகுங்கள், வீண் விரையம் செய்யாதீர்கள் என்று ஒரு பொன்மொழி கூறியுள்ளார். இதன்படி தியாகத் திருநாளான பக்ரீத் நாளில் குர்பானி கொடுக்கப்படும் இறைச்சி 3 பங்காக பிரிக்கப்படும். முதல் பங்கு தர்மத்திற்கும், இரண்டாவது பங்கு உற்றார், உறவினர்களுக்கும், 3வது பங்கு தமக்கும் வைத்துக் கொள்ளப்படும். இதில் தமக்காக வைத்துள்ள குர்பானி இறைச்சியை நபிகளின் சொல்படி "வீண் விரையம் ஆக்கக் கூடாது என்பதற்காக அந்த இறைச்சியை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்றாக கழுவி உப்பு, மஞ்சள், மிளகாய்தூளை தேவைக்கேற்ப கலந்து குறைவான தண்ணீரில் சுமார் 10 மணி நேரம் ஊறவைக்கின்றனர். ஊறவைத்த அந்த இறைச்சியை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நன்றாக கிளறிவிட்டு பின் கோன் ஊசி மூலம் மாலையாக கோர்த்து தங்கள் வீட்டு வாசல்களில் வெயிலில் காய வைப்பர். நன்றாக காய்ந்த உப்புக்கண்டத்தை சுமார் 3 மாதங்கள் வரை பயன்படுத்தி கொள்வர். இந்த உப்புக்கண்டம் பாதுகாப்பாக வைக்கப்பட்டு தேவைக்கு தகுந்தவாறு குழம்பிற்கோ, வறுக்கவோ பயன்படுத்துவதுடன் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி துபாய், பக்ரைன், சவுதி உட்பட பல்வேறு வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் உறவினர்களுக்கும் கொடுத்து அனுப்புவர். நன்றாக காய்ந்த இந்த உப்புக்கண்டம் சாப்பிடுவதற்கு மிக சிறந்த உணவாகும். மேலும் நகரங்களை விட கிராமங்களில் அதிகளவில் இடங்கள் இருப்பதால் தெருக்கள் முழுவதும் உப்புக்கண்டங்கள் தோரணங்களாக தொங்கவிடப்படுகிறது. கடையம் வட்டார பகுதிகளில் பொட்டல்புதூர், முதலியார்பட்டி, சம்பன்குளம், வீராசமுத்திரம், மாலிக்நகர் உட்பட பல்வேறு பகுதிகளில் தெருக்கள் மட்டுமின்றி வீடுகளிலும் உப்புக்கண்ட தோரணங்கள் காணப்படுகிறது. இந்த உப்புக்கண்டம் தயாரிப்பதன் முக்கிய காரணம் நபிகளின் சொல்படி "வீண் விரையம் செய்யக்கூடாது என்பதற்காகவும் பொருட்களை சேமிக்கும் பழக்கமும் ஏற்படுகிறது. நன்கு பக்குவப்படுத்தப்பட்ட உப்புக்கண்டத்தை பார்த்தாலே நாவில் எச்சில் ஊரும் அளவிற்கு மிகவும் சுவையாக தயாரிக்கப்படுகிறது.