திருப்பதி தேவஸ்தான கோவில்களில் கண்காணிப்பு கேமரா: அறங்காவலர் குழுவில் முடிவு
திருப்பதி: திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான, அனைத்து கோவில்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இப்பணியை விரைவுப்படுத்த, அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது.
பயங்கரவாதிகள் அச்சுறுத்தல்: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு, பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால், அதன் பாதுகாப்பை பலப்படுத்த, தேவஸ்தானம் முடிவு செய்தது. நாடு முழுவதும் உள்ள, தேவஸ்தானத்திற்குட்பட்ட அனைத்து கோவில்களிலும், நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, கடந்த ஜூலை மாதம் நடந்த, அறங்காவலர் குழு கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு, 62 கோடி ரூபாய் நிதி ஒதுக்கவும், முடிவு செய்யப்பட்டது. இப்பணிகள் பிரம்மோற்சவத்திற்குள் முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஆலோசனை : அதன்பின், அறங்காவலர் குழுத் தலைவராக இருந்த, சுப்ரமண்யத்திற்கு பதிலாக, கோபால் பொறுப்பேற்றார். பிரம்மோற்சவம் முடிந்து விட்டது. ஆனால், திட்டத்தை செயல்படுத்த, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அறங்காவலர் குழு தலைவர் தலைமையில், மூன்று பேர் கொண்ட சிறப்புக் குழு, ஐதராபாத்தில் சந்தித்து, ஆலோசனை நடத்தியது. அந்த கூட்டத்தில், அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்த, தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதாது என்பதால், நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஒப்பந்தப் புள்ளி கோர, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்ற, 6-7 மாதங்கள் தேவைப்படும். இப்பணியை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள, பிரம்மோற்சவத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவில்களில் பொருத்தப்படும் கேமராக்களை கண்காணிக்க, திருமலை மற்றும் திருப்பதியில், 14 கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட உள்ளன. சென்னை, பெங்களூரு, டில்லி, மும்பை நகரங்களில் உள்ள, தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவில்களில், நவீன கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, இணையதளம் வாயிலாக, திருப்பதியில் இருந்து கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரி அசோக்குமார் கூறும்போது, ""இந்த கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த, அரசின் ஒத்துழைப்பும் அவசியம். கண்காணிப்பு கேமராக்கள், விரைவில் பொருத்தப்பட்டு, பயன்பாட்டுக்கு வரும், என்றார்.