உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியபட்டிணத்தில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கோலாகலம்!

பெரியபட்டிணத்தில் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா கோலாகலம்!

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டிணம் செய்யதலி ஒலியுல்லா தர்காவில்,112ம் ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு இன்று அதிகாலை மிக விமரிசையாக நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பெரியபட்டிணத்தில் மகான் செய்யதலி வலியுல்லாஹ் தர்கா உள்ளது.112 வது ஆண்டின் சந்தனக்கூடு விழா அக்., 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.இன்று அதிகாலை நான்கு மணிக்கு பெரியபட்டணம் ஜலால், ஜமால் ஜூம்மா பள்ளிவாசலிருந்து தாரை, தப்பட்டை முழக்கத்துடன் ரதம் சகிதமாக,சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து அதிகாலை ஐந்து மணிக்கு தர்கா வந்தடைந்தது. கூடியிருந்த பக்தர்கள் சந்தனக்கூடு மீது மலர் தூவி வரவேற்றனர். அனைத்து சமுதாய மக்கள் இணைந்து சந்தனக்கூடுவை தோளில் சுமந்து தர்காவிற்கு ஊர்வலமாக தூக்கி வந்தனர். பின் தர்காவில் சிறப்பு துஆ (பிரார்த்தனை)நடந்தது. முன்னதாக டி.வி., மற்றும் திரைப்பட கலைஞர்களின் காமெடி மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தது. தர்கா மின் விளக்கு அலங்காரத்தால் ஜொலித்தது. ஜலால், ஜமால் ஜூம்மா பள்ளி தலைவர் அப்துல் லத்தீப்,ஊராட்சி தலைவர் எம்.எஸ்.கபீர், தொழிலதிபர் சிங்கம் பஷீர்,விழா கமிட்டி தலைவர் எம்.சிராஜ்தீன்,செயலாளர் அப்துல் மஜீது, கவுன்சிலர் அபிபுல்லா மற்றும் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள்,இந்து,கிறிஸ்துவ அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர்,இஸ்லாமிய நண்பர் குழு,சுல்த்தானியா சங்க நிர்வாகிகள் செய்தனர்.கீழக்கரை டி.எஸ்.பி.,சோமசேகர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !