மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசம், வைரகிரீடம்!
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஐப்பசி பூரம் திருவிழா அக்., 30 ல், நடக்கிறது. இணை கமிஷனர் ஜெயராமன் அறிக்கை: இவ்விழாவை முன்னிட்டு உச்சிகாலத்தில் காலை 10 மணிக்கு மூலஸ்தான மீனாட்சி அம்மனுக்கும், உற்சவர் அம்மனுக்கும் ஏத்தி இறக்குதல் சடங்குகள் மற்றும் தீபாராதனை நடந்து, உச்சிகாலத்தில் ஆலவட்டத்துடன் உற்சவர் அம்மன் சேத்தி வந்து சேரும். நவ.,2, தீபாவளி, அன்று முழுவதும் அம்மனுக்கு வைரக்கிரீடம், தங்க கவசமும், சுவாமிக்கு வைர நெற்றிப்பட்டையுடன் சாத்துப்படி செய்யப்பட்டு, தீபாவளி சிறப்பு தரிசனம் நடைபெறும். நவ., 3 முதல் நவ., 8 வரை கோலாட்ட உற்சவத்தை முன்னிட்டு, மாலை 6 மணியளவில் அம்மன் எழுந்தருளி, ஆடி வீதியில் சுற்றி வந்த பின், கொலுச்சாவடி சேத்தியாகும். நவ., 7ல் மாலை 6 மணிக்கு அம்மன் வெள்ளி கோரதத்தில் எழுந்தருளி, ஆவணி மூல வீதி உலா நடைபெறும். நவ., 8ல் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி ஆடிவீதி உலா நடைபெறும். கந்த சஷ்டி உற்சவம் நவ.,3 முதல் நவ.,8 வரை நடக்கிறது. நவ.,9ல் காலை 7 மணிக்கு கூடல்குமாரருக்கு (முத்துக்குமாரசுவாமி) வெள்ளிக்கவசம் (பாவாடை) சாத்துப்படியும், விசேஷ அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனையும் நடக்கும். எனவே, நவ., 3 முதல் நவ., 9 வரை உபயதாரர் சார்பாக உபய திருக்கல்யாணம், தங்க ரதம் உலா ஆகிய சேவைகள் நடத்தப்படுவதில்லை. ஏற்பாடுகள் கோயில் தக்கார் கருமுத்துகண்ணன் தலைமையில் நடக்கிறது.