திருமலையில் 3ம் தேதி தீபாவளி ஆஸ்தானம்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வரும், 3ம் தேதி, தீபாவளி ஆஸ்தானம் நடைபெறும் என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
உற்சவங்கள் ரத்து: ஒவ்வொரு ஆண்டும், தீபாவளியையொட்டி, ஏழுமலையான் கோவிலில், தங்க வாசலுக்கு அருகில் உள்ள, கண்டா மண்டபத்தில், தீபாவளி ஆஸ்தான நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு, நவம்பர், 3ம் தேதி, காலை, 7:00 மணியில் இருந்து 9:00 மணிக்குள், கண்டா மண்டபத்தில், அலங்கரிக்கப்பட்ட, சர்வ பூபாள வாகனத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருள்வார். அதைத் தொடர்ந்து, சிறப்பு பூஜை, அபிஷேகம், அர்ச்சனை செய்து, பஞ்சாங்கம் படிக்கப்படும். இந்நிகழ்ச்சியில், அனைத்து தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொள்வர். இந்நிகழ்ச்சி காரணமாக, கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்தோற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஆகியவற்றை, தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. தோமாலை, அர்ச்சனை ஆகியவை, பக்தர்கள் இல்லாமல், தனிமையில் நடத்தப்படும். சுப்ரபாதம் மற்றும் சகஸ்ர தீபாலாங்கார சேவைகளில் கலந்து கொள்ள, பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.
பார்வையற்றோர் வேண்டுகோள்: சென்னையை சேர்ந்த, ஏழு பார்வையற்ற நண்பர்கள், ஒவ்வொரு ஆண்டும், மூன்று அல்லது நான்கு முறை, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருவர். அவ்வாறு வரும்போது, வயோதிகர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் செல்லும் வழியில் அனுமதிக்கப்படுகின்றனர். அப்போது மற்றவர்கள் மீது மோதக்கூடிய வாய்ப்பு இருப்பதால், பார்வையற்றோருக்கு தனி வரிசை அல்லது மற்றவர்கள் செல்வதற்கு முன், தனியாக அனுப்பினால், இத்தகைய அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க முடியும் என, தேவஸ்தானத்திடம் கோரியுள்ளனர். அதேபோல், பார்வையற்றோருக்கு, தனி விடுதி ஒதுக்கினால், திருமலைக்கு வந்தவுடன், அந்த விடுதிக்கு செல்ல வசதியாக இருக்கும். அவர்களை அழைத்து செல்ல, தனி வாகனத்தை, தேவஸ்தானம் ஏற்பாடு செய்தால், திருமலைக்கு வரும் பார்வையற்றோர் மிகவும் பயனடைவர் என, தேவஸ்தான அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாடகை அறை பூட்டு மாற்றம்: திருமலையில், தங்கும் விடுதிகளில் உள்ள அறைகளுக்கு, பல ஆண்டுகளாக, ஒரே மாதிரியான பூட்டு பயன்படுத்தப்படுகிறது. இதனால், திருடர்கள் சுலபமாக மாற்று சாவியை தயாரித்து, பக்தர்கள் இல்லாத சமயத்தில், அறைக்குள் புகுந்து, பொருட்களை தி ருடிச் செல்கின்றனர். அடிக்கடி பூட்டுகளை மாற்றுவதன் மூலம், திருட்டுகளை குறைக்க முடியும் என, தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாச ராஜு, தங்கும் விடுதி துறை அதிகாரியுடன் கலந்தாலோசித்து, புதிய பூட்டு வாங்க உத்தரவிட்டார். அதன்படி பூட்டுகளை மாற்றும் பணி நடந்து வருகிறது.