பொள்ளாச்சி கோவில்களில் சூரர்களை வதம் செய்யும் சம்ஹார விழா
கந்தசஷ்டியை முன்னிட்டு, நான்கு சூரர்களை வதை செய்யும் சூரசம்ஹார திருவிழா பொள்ளாச்சி, உடுமலையில் இன்று நடக்கிறது.பொள்ளாச்சி சுப்பிரமணிய சாமி கோவிலில், கந்த சஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார திருவிழா நடக்கிறது. கடந்த 3ம் தேதி கந்த சஷ்டி விழா துவங்கியது. தொடர்ந்து நேற்று வரை நான்கு கால அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நேற்று மாலை 6.00 மணிக்கு சிவபெருமானிடம் இருந்து சுப்பிரமணியசாமிக்கு வேல் வாங்கும் உற்சவம் நடந்தது. இன்று (8ம் தேதி) மாலை 3.00 மணி முதல் மருதாசல அடிகள் முன்னிலையில் சூரசம்ஹார திருவிழா துவங்குகிறது. கோவிலில் இருந்து புறப்பட்டு எஸ்.எஸ்.கோவில் வீதி கிழக்கு வழியாக சத்திரம் வீதி, தெப்பக்குளம் வீதி சந்திக்கும் சந்திப்பில், முதல் சூரன் கஜமுகா சூரன் வதை நடக்கிறது. பிறகு தெப்பக்குளம் வீதி வழியாக சென்று, தெப்பக்குளம் வீதியும், வெங்கட்ரமணா வீதி சந்திக்கும் சந்திப்பில் இரண்டாவது சூரன் சிங்கமுகா சூரன் வதையும் நடக்கிறது. தொடர்ந்து வெங்கட்ரமணா வீதி வழியாக சென்று ராஜாமில் ரோடு சந்திக்கும் இடத்தில் (தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எதிரில்) மூன்றாவது சூரன் பானுகோபன் வதையும், பின் உடுமலை ரோடு வழியாக சென்று தேர்நிலையத்தில் நான்காவது சூரன் சூரபத்மன் வதையும் நடத்தி கோவில் வந்தடைகிறது. ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் ஜெயசெல்வம், தக்கார், நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இத்தகவலை கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். விழாவையொட்டி, அசாம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும், பாதுகாப்புக்காகவும், போக்குவரத்தை சீராக்கவும் சிறப்பு போலீசார் பணியில் ஈடுபடுகின்றனர்.உடுமலை உடுமலை பாப்பன்குளம் ஞானதண்டாயுதபாணி கோவிலில், சூரசம்ஹர விழா இன்று நடக்கிறது. கோவிலில், கடந்த 3ம் தேதி முதல், சூரசம்ஹர பெருவிழாவையொட்டி, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில், சாமி திருவீதியுலா, கந்தபுராணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று, காலை 9:00 மணிக்கு, கந்தபுராணம் செற்பொழிவுடன் சூரசம்ஹர நிகழ்ச்சி துவங்குகிறது. பகல் 11.00 மணிக்கு, ஆறுவகை பூ, கனி, அன்னம் ஆகியவற்றால், நிவேதனம் செய்யப்பட்டு, தீபாரதனை நடக்கிறது. 12.15 மணிக்கு, நடை திருக்காப்பிடுதல், வீரவேல்முருகன் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளல், வீரபாகுத்தேவர் போர்க்கோலத்தில் புறப்பாடு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 5:00 மணிக்கு, ஞானவேல் முருகன் எழுந்தருளல், சிங்கமுகாசுரன் வதம் ஆகிய நிகழ்ச்சிகளும், மயில்வாகனம், சேவற்கொடியுடன் அருள்பாலித்தல், இரவு 8:30 மணிக்கு, ராக்கால அபிஷேகம், புஷ்ப அலங்காரம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. -நமது நிருபர் குழு-