திருவண்ணாமலையில் வெள்ளி கற்பக விருஷ வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா!
திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவில், நான்காம் நாளான நேற்று, வெள்ளி கற்பக விருஷ வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா வந்தார். திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, காலையில் நடந்த ஸ்வாமி திருவீதி உலாவில், விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் நாக வாகனத்திலும் வீதி உலா வந்தனர். இரவு, 10 மணிக்கு மேல் நடைபெற்ற பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவில், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வாணை சமேத முருகர் வெள்ளிமயில் வாகனத்திலும், அண்ணாமலையார் சமேத உண்ணாமலையம்மன் கற்பக விருஷ வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
3,500 கிலோ நெய் கொள்முதல்: திருவண்ணாமலையில், மஹா தீபம் ஏற்றுவதற்காக, வே<லூர் ஆவின் நிறுவனத்திடமிருந்து, 3,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டது. கார்த்திகை தீபத் திருவிழா கடந்த, 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 14ம் தேதி மஹா தேரோட்டமும், 17ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6 மணிக்கு மலை மீது மஹா தீபமும் ஏற்றப்படுகிறது.இதற்காக, ஆவின் நிறுவனம் நெய் வழங்கி வந்தது. மதுரை காந்தி கிராமம் நிறுவனத்திடமிருந்து, கடந்த, 4 ஆண்டுகளாக கோவில் நிர்வாகம் நெய் கொள்முதல் செய்தது. இந்நிலையில், மீண்டும் வேலூர் ஆவின் நிறுவனம் கோவில் நிர்வாகத்தினரிடம் தொடர்பு கொண்டு மற்ற நிறுவனங்களை விட குறைந்த விலைக்கு நெய் வழங்குவதாக கூறினர். இதையடுத்து, இந்த ஆண்டு ஆவின் நிறுவனத்திடமிருந்து, 3,500 கிலோ நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நெய் இன்று, கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது. மேலும், பக்தர்களிடம் இருந்தும் நெய் காணிக்கை பெறப்படுகிறது. இதுவரை, மூன்று லட்சம் ரூபாய் நெய் காணிக்கை வசூலாகியுள்ளது. மேலும் நெய் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக, அண்ணாமலையார் கோவில் கொடிமரம் அருகே சிறப்பு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது.மஹா தீபம் ஏற்றுவதற்கு, 17ம் தேதி காலை, மலை உச்சிக்கு நெய் கொண்டு செல்லப்படும். மஹா தீபம் ஏற்றப்பட்டு தொடர்ந்து, 11 நாட்களுக்கு எரியும். தீபம் ஏற்றுவதற்கு, திருப்பூரிலிருந்து, 1,000 மீட்டர் காடா துணி கொண்டு வரப்படுகிறது.