கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு 2,500 சிறப்பு பஸ்கள்!
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்தை காண செல்லும் பக்தர்களுக்காக, அரசு போக்குவரத்து கழகங்களால், 2,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், வரும், 17ம் தேதி, கார்த்திகை தீப விழா கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்க, தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, பல லட்சம் பக்தர்கள் வருவர். இதையடுத்து, சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர், கடலூர், சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, கூடுதல் சிறப்பு பஸ்களை இயக்க, போக்குவரத்து கழகத்தினர் திட்டமிட்டு உள்ளனர்.
இது குறித்து, போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது: கார்த்திகை தீபத்தை காண, கடந்தாண்டு, 15 லட்சம் பேர் வந்தனர். இந்தாண்டு, 20 லட்சம் பக்தர்கள் வருவர் என எதிர்பார்க்கிறோம். வரும், 16ம் தேதி, பவுர்ணமி தினம் என்பதால், அன்று அதிகளவில் பக்தர் வருவர். 17ம் தேதி அதிகாலை கோவிலில் பரணி தீபமும், அன்று மாலை, மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது. கார்த்திகை தீபத்திற்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானோர், 18ம் தேதி திரும்பிச் செல்வர். இவற்றை கருத்தில் கொண்டு, 16ம் தேதி முதல், 18ம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு, திருவண்ணாமலைக்கு 1,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்; சென்னையில் இருந்து மட்டும், 650 பஸ்கள் இயக்கப்படும். பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பின், அவர்களை வரிசைப்படுத்துவதுடன், டோக்கன் பெற்று, பஸ்களில் ஏறிச் செல்லும் வகையில், பயணத்தை முறைப்படுத்துவோம். சேலம், கும்பகோணம், கோவை உள்ளிட்ட பிற போக்குவரத்து கழகங்கள் சார்பில், 1,000த்துக்கும் மேற்பட்ட பஸ்களை இயக்குவர். திருவண்ணாமலைக்கு, மொத்தமாக, 2,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -