உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவஞானபோதம் பகுதி-5

சிவஞானபோதம் பகுதி-5

இரண்டாம் நூற்பா

முதல் நூற்பாவோடு இந்நூற்பா தொடர்புற்று நிற்கிறது. எவ்வாறெனில், முதல் நூற்பாவில் உலகம் முதல்வனிடத்தில் ஒடுங்கிப் பின் அவனிடத்தினின்றே தோன்றும் என்பது கூறப்பட்டது. அது தோன்றும் காலத்தில் எவ்வாறு தோன்றும்? முதல்வன் அதனை எம்முறையில் செயற்படுத்துவான்? என்பவற்றை அறியும் அவா மாணவர்க்கு எழுதல் இயல்பு. அவ்விருப்பத்தை நிரப்பும் வகையில் இந்நூற்பா அமைகிறது.

நூற்பா

அவையே தானே யாய், இருவினையின்
போக்கு வரவு புரிய ஆணையின்
நீக்க மின்றி நிற்கும் அன்றே.

ஆசிரியர் கூறும் கருத்துரை:
என்பது சூத்திரம். என் நூதலிற்றோ எனின், புனர் உற்பவம் வருமாறு உணர்த்துதல் நூதலிற்று.

கருத்துரையின் பொருள்

ஒடுங்கியிருந்த உலகத்தை இறைவன் உயிர்களின் பொருட்டு மீளத் தோற்றுவித்தலாகிய மறுதோற்றம் வரும் முறையை உணர்த்துவது இந்நூற்பாவின் கருத்து என ஆசிரியர் கூறுகிறார்.

நூற்பாவின் பொருள்:

இறைவன் உயிர்களோடு கலந்து ஒன்றாய் நிற்பான். பொருள் தன்மையினால் அவற்றின் வேறாகி நிற்பான்; அவையும் தானுமாய் உடனாகி நிற்பான்.

இவ்வாறு உயிர்களோடு இயைந்து நின்று, இருவினையாகிய நெறிக்கு ஏற்ப அவை இறத்தல் பிறத்தல்களைப் புரியும் வண்ணம் செய்விப்பான்.

இவ்வாறெல்லாம் அவன் செய்விப்பது தனது சத்தியினாலேயாம். ஆணை எனப்படும் அச் சத்தியினின்றும் அவன் வேறாகாது பிரிப்பின்றி நிற்பான்.

பதவுரை:

அவையே யாய் - இறைவன் எல்லா உயிர்களிடத்திலும் வேற்றுமை யின்றிக் கலந்து அவ்வுயிர்களேயாகி நிற்கிறான்.

தானே யாய் - பொருள் தன்மையால் அவன் அவ்வுயிர்களின் வேறாகி நிற்கிறான்.

அவையே தானே யாய் - அவையும் தானுமாய் உடனாகி நிற்கிறான்.
(இங்ஙனம் இறைவன் உயிர்களோடு ஒன்றாயும், வேறாயும், உடனாயும் இயைந்து நின்று)

ஆணையின் இரு விணையின் - தனது சத்தியினால் வருகின்ற இரு வினைகளுக்கு ஏற்ப

போக்குவரவு புரிய - அவ்வுயிர்கள் இறந்தும் பிறந்தும் உழலும்படி செய்து

ஆணையின் நீக்கம் இன்றி நிற்கும் - அச் சத்தியினின்றும் தான் வேறாதல் இன்றி நிற்பான்.

சிறப்புரை

சங்கார காரணன் ஆகிய முதல்வன் உயிர்களோடு ஒன்றாய், வேறாய், உடனாய் நின்று, அவை தம் இருவினைகளுக்கு ஏற்பப் போக்கு வரவு புரியத்தான் தன் ஆணையின் நீக்கமின்றி நிற்பன் என்பது கூறப்பட்டது.

இதனை இன்னும் எளிமையாகக் கூறினால், இறைவன் தன் சத்தியோடு கூடி உயிர்களின் பொருட்டுப் படைத்தல் முதலிய தொழில்களைச் செய்து கருத்தாவாய் நிற்பன் என்பதாம்.

இறைவனுக்கு உளதாகிய இவ்வியல்பு என்றும் உள்ள இயல்பு ஆகாமல் உயிர்களுக்காக மேற்கொண்ட இயல்பு ஆதலின், இது தடத்த லக்கணம் எனப்படும் பொது வியல்பு ஆகும். இதன் விரிவை ஐந்தாம் நூற்பாவின் இறுதியிற் காணலாம்.

சொரூப லக்கணம் எனப்படும் உண்மையியல்பு ஆறாம் நூற்பாவில் கூறப்படும்.

கூறுகள்

இப்பொருளை நான்கு கூறுகளாக வகுத்துக் கொண்டு விளக்குகிறார் ஆசிரியர். அக்கூறுகளும் அவற்றில் அமைந்த பொருள்களும் வருமாறு:

கூறு                           பொருள்

முதற் கூறு                  முதல்வன் உயிர்களோடு இயைந்து நிற்றல்
இரண்டாம் கூறு           உயிர்கøளை வினைக்கேற்பச் செயற்படுத்துதல்
மூன்றாம் கூறு              உயிர்கள் இறந்தும் பிறந்தும் வருதல்
நான்காம் கூறு              உயிர்களைச் செயற்படுத்தும் தனது சத்தியினின்றும் இறைவன் வேறாகாது நிற்றல்

முதற் கூறு

இறைவன் ஒடுங்கிய உலகத்தை உயிர்களுக்காகத் தோற்றுவிக்கிறான் என்றால், உயிர்களுக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்? என்ற வினா முதலில் எழுகிறது. அதற்கு விடை கூறு முகமாக அவையே தானேயாய் என்னும் தொடரை அமைக்கின்றார் ஆசிரியர்.

அத்துவிதம்/ அத்வைதம்:

இறைவன் தனது பெரு நிறைவில் உயிர்களை அடங்கக் கொண்டுள்ளான். கடல் வெளி நீர்ப் பரப்பைத் தன்னுள் அடங்கக் கொண்டுள்ளது போன்றது இது.

தன்னுள் அடங்கி நிற்கும் உயிர்களோடு அவன் உடன் கலந்து பிரிப்பின்றி நிற்கின்றான். முதல்வன் உயிர்களோடு கொண்டுள்ள பிரிப்பறியாத இச் சம்பந்தமே அத்துவிதம் அல்லது அத்வைதம் என்ற சொல்லாற் குறிக்கப் பெறுகிறது.

இரண்டு பொருள்கள் இரண்டு என்னும் தன்மை தோன்றாமல் ஒன்று என்று சொல்லும்படி ஒற்றுமைப்பட்டு நிற்பதே அத்துவித சம்பந்தமாகும்.

காட்டாக, உப்புக் கரைந்த நீரில் உப்பும் நீருமாகிய இருபொருள்கள் கலந்துள்ளன. ஆயின் இரண்டு என்னும் தன்மை புலப்படாமல் ஒன்றாய் நிற்கின்றன. அதுபோல இறைவன் உயிர்களோடு இயைந்து ஒன்றி நிற்கின்றான்.

மூவகையினதாதல்:

முதல்வன் உயிர்களோடு கொண்டுள்ள இவ்வத்துவிதத் தொடர்பு மூவகையினதாகக் கூறப்படும். அவை ஒன்றாதல், வேறாதல், உடனாதல் என்பன.

அவையே தானேயாய் என்ற தொடரில் இம் மூன்று வகையும் உணர்த்தியுள்ளார் ஆசிரியர். அத் தொடரை அவையே யாய் எனவும், தானே யாய் எனவும், அவையே தானே யாய், எனவும் அமைத்துக் கொள்ள வேண்டும். அவை என்பது உயிர்களைக் குறிக்கும். உயிர்களோடு இறைவன் அவையேயாய் இருப்பான். தானேயாய் இருப்பான்; அவையும் தானுமாய் இருப்பான் என்பதாம்.

அவையே யாதல் - ஒன்றாதல்
தானே யாதல் - வேறாதல்
அவையும் தானுமாதல்- உடனாதல்

இனி இவற்றைத் தனித்தனியாக விளக்குவோம்.

ஒன்றாதல்:

இறைவன் எல்லா இடங்களிலும், அவ்விடங்களில்  உள்ள எல்லாப் பொருள்களிலும் கலந்து ஒன்றாய் நிற்பான். அக்கலப்பினை உணர்ந்து கொள்ளுதற்கு ஏற்ற உவமை உடலில் நிற்கும் உயிர்போல் என்பது.

உயிர் தன்னின் வேறாகிய உடலிற் பொருந்தி அவ்வேற்றுமை சிறிதும் தோன்றாமல் அவ்வுடலே யென்னும்படி ஒற்றுமைப்பட்டு நிற்கிறது. அதுபோல, இறைவன் உயிர்களும் உலகமும் ஆகிய யாவற்றிலும் கலந்து அவையேயாக நிற்கின்றான்.

உயிரின் கலப்பு இல்லாமல் உடல் தனித்து நிற்றல் இயலாது. அதுபோல, இறைவனது கலப்பு இல்லாமல் எவ்வகைப் பொருளுக்கும் இருப்பு என்பது இல்லை. அவ்வப் பொருள்கள் அவ்வத் தன்மையோடு இருப்பது இறைவனது கலப்பினாலே யாம்.

எனவே எப்பொருளும் நிலைபெறுவதற்கு அதனோடு இறைவன் ஒன்றாய்க் கலந்து நிற்றல் இன்றியமையாததாகின்றது.

வேறாதல்:

உயிர்களோடு ஒன்றாய்க் கலந்திருக்கும் அந்நிலையிலும் இறைவன் அவற்றின் வேறாகித் தானேயாய் நிற்பான். இதனை விளங்கிக் கொள்வதற்கு ஏற்ற உவமை கண்ணொளியோடு கலந்து நிற்கும் சூரியவொளி போல் என்பது.

கண்ணொளி தானே உருவத்தைக் காணமாட்டாது. சூரியவொளி கண்ணொளியோடு கலந்து நின்று காட்டுகிற போது அக் கண்ணொளி காண வல்லதாகும். எனவே காட்சியின்போது அவ்விரு ஒளிகளும் இயைந்து நிற்கின்றன என்பது புலனாகும். சூரியவொளி கண்ணொளியில் ஒன்றாய்க் கலந்து நிற்பினும், கண்ணொளி பொருளைக் காண்பதாக, சூரியவொளி கண்ணிற்குப் பொருளைக் காட்டுவதாய்  நிற்கும் தன்மையால் வேறுபட்டு நிற்கும்.

கண்ணொளியோடு கலந்து நிற்கும் சூரியவொளி போல, உயிர் ஒரு பொருளை அறியுமிடத்து உயிரோடு இறைவனும் இயைந்தே நிற்பான். இறைவனும் உயிரும் பிரித்தறிய வாராது இயைந்து நிற்கும் அந்நிலையிலும் உயிர் பொருளை அறிவதாக, இறைவன் உயிருக்கு அறிவிப்பவனாய் நிற்கும் தன்மையால் வேறுபட்டு நிற்பான்.

இறைவன் அறிவிப்பான் என்பதன் பொருள், உயிரறிவை விளக்கிப் பொருளை அறியும் தகுதியை அடையச் செய்வான் என்பதேயாம்.

இனி ஏனைய உலகப் பொருள்களில் இறைவன் வேறாய் நிற்றலாவது, அவை இயக்கப்படுவனவாகத் தான் இயக்குபவனாகி நிற்றல்.

இவ்வாறு சித்தாகிய உயிர்களின் அறிவை விளக்குதற்கும், சடமாகிய பிற பொருள்களை இயக்குதற்கும் இறைவன் வேறாய் நிற்றல் இன்றியமையாததாகின்றது.

உடனாதல்:

இறைவன் வேறாய் நின்று உணர்த்துவதனால் பொருளை அறியும் தகுதியை அடைந்த உயிர் பின் தானே பொருளை அறியும் என்று கருதி விடலாகாது. அப்பொழுதும் இறைவனது உதவி வேண்டும். உயிரறிவு பொருளை அறியும்படி இறைவன் அதனோடு தானும் உடன் நின்று அறிய வேண்டும்.

எனவே, உடனாதலாவது, உயிர் ஒன்றை அறியும் பொழுது இறைவனும் அதனோடு உடன் சென்று அறிதலாகும்.

இதனை விளங்கிக் கொள்வதற்கு ஏற்ற உவமை, கண்ணொளியோடு கலந்து நிற்கும் உயிரறிவு போல் என்பது.

கண்ணொளி பொருளைக் காண்பதற்கு உயிரறிவும் <உடன் நின்று காணல் வேண்டும். இதனை நம் அனுபவத்தில் வைத்து உணரலாம். சில நேரங்களில் நாம் வேறு நினைவில் அழுந்தியிருக்கும்போது நமது கண்கள் விழித்திருப்பினும் எதிரில் வரும் நண்பரைக் காணமாட்டா. அதனால் அவரைப் பார்க்காமலே செல்லுவோம். அவ்வேளையில் உயிரறிவு கண்ணோடு பொருந்தி உடன் நின்று காணாததால், நம் கண்கள் காணமாட்டாவாயின என்பது தெளிவு. அதுபோல இறைவன் உடனிருந்து அறிவில்லையென்றால் உயிர்களும் அறிய மாட்டா.

எனவே உயிர்கள் பொருள்களை அறிந்து அனுபவிப்பதற்கு இறைவன் உடனாய் நின்று அறிதல் இன்றியமையாததாகின்றது.

இந்த உடனாதல் தன்மை அறிவுடைய உயிர்களிடத்திலேயே சிறந்து நிற்பதாகும். எனினும் ஏனைய சடப்பொருள்களின் தொழிற்பாட்டிற்கும் அவன்  அவ்வாறு இயைந்து நிற்றல் வேண்டும்.

இங்ஙனம் ஒன்றாய் நிற்றல், வேறாய் நிற்றல், உடனாய் நிற்றல் என்னும் மூன்று தன்மையும் ஒருங்கே விளங்க நிற்கும் நிலையே அத்துவிதம் ஆகும்.

இந்நிலையை நம் ஆசிரியருக்கு முற்பட்டவராகிய ஞான சம்பந்தப் பெருமான் விளங்க உணர்த்தியுள்ளார். அத்திருப்பாடல் வருமாறு:

ஈறாய்முதல் ஒன்றாய் இரு பெண் ஆண் குணம் மூன்றாய்
மாறாமறை நான்காய் வரு பூதம் அவை ஐந்தாய்
ஆறார் சுவை ஏழோசை யொடு எட்டுத்திசை தானாய்
வேறாய் உடனானான் இடம் வீழிம் மிழலையே.

நூற்பாவில் அவையேதானேயாய் என அத்துவித இயைபைக் குறித்த ஆசிரியர் இங்கு மேற்கோளும் ஏதுவும் காட்டி அப்பொருளை உள்ளவாறு உணர்த்துகிறார்.

மேற்கோள்

ஈண்டு இவ்வான்மாக்கள் பலவும் முதல்வன் தானேயாய் நிற்கும் என்றது

முதல்வன் இவ்வான்மாக்கள் பலவுமாய், தானேயாய், இவ்வான்மாக்கள் பலவும் தானுமாய் நிற்பான் என, மேற்கூறிய மூன்று வகையும் அமையும்படி உரைத்துக் கொள்ள வேண்டும்.

ஏது

அத்துவிதம் என்ற சொல்லானே ஏகம் என்னில், ஏகம் என்று சுட்டுவது உண்மையின், அத்துவிதம் என்ற சொல்லே அன்னிய நாத்தியை உணர்த்தும் ஆயிட்டு.

இவ் ஏதுவில் அபேத வாதத்தை மறுக்கின்றார் ஆசிரியர். அபேத வாதம் என்பது பின்வருமாறு கூறப்படும்.

அபேத வாதம்:

உள்ளது ஒரு பொருளே. அப்பொருளே பிரமம் எனப்படும் கடவுள். பிரமத்திற்கு வேறாக உயிர்கள் எனத் தனியே யில்லை. பிரமமாகிய ஒரு பொருளே பல்வேறு உயிர்களாகத் தோற்றம் அளிக்கிறது. பொன் என்ற ஒரு பொருளே பல்வேறு அணிகலன்களாக மாறித் தோன்றுதல் போன்றது இது. பொன்னுக்கும் அணிகலனுக்கும் இடையே வேற்றுமையில்லை. பொன்னே அணிகலன்; அணிகலனே பொன். அதுபோலப் பிரமத்திற்கும் உயிருக்கும் வேற்றுமையில்லை. பிரமமே உயிர்; உயிரே பிரமம்.

இவ்வாறு கூறுவது அபேத வாதம் எனப்படும். அபேதம்- வேற்றுமையின்மை.

எனவே, கடவுளும் உயிரும் பொருளால் ஒன்றே ஆயினும் சில காரணங்களால் வேறு போலத் தோன்றுகின்றன. இது வெறும் தோற்றமே. உண்மையில் கடவுளும் உயிர்களும் ஒன்றே என்பதே இக்கொள்கையாகிறது.

அபேத வாதம் கூறுவோர் வேதத்தில் வரும் பிரமம் அத்துவிதம் என்ற தொடரை மேற்கோள் காட்டுவர். அத்துவிதம் என்ற சொல்லுக்கு இரண்டு இல்லை எனப் பொருள் காண்பர். துவிதம்- இரண்டு; அத்துவிதம்- இரண்டு இல்லை. இரண்டு இல்லாதது ஒன்றே. மூன்று முதலாக வரும் எண்கள் யாவும் இரண்டையுடையன என்பது தெளிவு. ஆகவே பிரமம் அத்துவிதம் என்ற தொடருக்குப் பிரமம் ஒன்றே உள்ளது. பிரமத்திற்கு வேறாய் மற்றொரு பொருள் இல்லை என்று அவர்கள் பொருள் கூறுவர்.

மறுக்கும் திறம்:

அத்துவிதம் என்னும் சொல் பற்றி அவர்கள் இவ்வாறு கூறுவதை மேற்கூறிய ஏதுவில் எடுத்துக் காட்டி, அதனை மறுத்துப் பின் அச்சொல்லின் உண்மைப் பொருளை உணர்த்துகிறார் ஆசிரியர்.

அத்துவிதம் என்ற சொல்லானே ஏகம் என்னில் என்ற முன் பகுதி அபேத வாதத்தைச் சுட்டுவதாய் அமைகிறது. அத்துவிதம் என்ற சொல் பற்றியே கடவுளும் உயிரும் பொன்னும் அணிகலனும் போல ஒன்று எனக் கூறினால் என்பது இதன் பொருள்.

ஏகம் என்று சுட்டுவது உண்மையின் என வரும் அடுத்தப் பகுதி அபேத வாதத்திற்கு மறுப்பாய் அமைகிறது. அம் மறுப்பு நுணுகி உணரத் தக்க வகையில் உள்ளது. அதனைச் சிறிது விளக்குவோம்.

அத்துவிதம் என்பதற்கு இரண்டு இல்லை என நீ பொருள் கொண்டாலும் அதனால் உயிரும் கடவுளும் ஒன்று என்னும் கருத்துப் பெறப்படாது; மாறாக. உயிர் கடவுளின் வேறு என்பதே பெறப்படும். எவ்வாறெனில், இரண்டு இல்லை என்னும் மறுப்பு எப்பொழுது எழும்? இரண்டு என்னும் உணர்வு தோன்றிய பின்பே அதை மறுக்க எழும். அஃதாவது, கடவுளும் உயிரும் என இரண்டில்லை என்ற மறுப்பு, கடவுளும் உயிரும் ஆகிய இரண்டு உள்ளன என்னும் உணர்வு தோன்றிய பின்பே எழுவதாகும்.

கடவுளையும் உயிரையும் இரண்டாக உணர்தல் மயக்கவுணர்வும், ஒன்றாக உணர்தலே மெய்யுணர்வும் ஆதலின், இரண்டாக உணரும் மயக்கவுணர்வை நீக்கவே இரண்டு இல்லை என்னும் மறுப்பு எழுந்தது. அவ்வாறாயின், முதலில் மயக்கவுணர்வை உடையதாயிருந்தது எது? பின்னர், ஒன்றே எனத் தெளிந்து மெய்யுணர்வு பெற்றது எது? கடவுள் என்ற ஒரு பொருளே உள்ளது என்றால், அக்கடவுளே மயக்கவுணர்வை உடையதாயிற்று என்றல்லவா கொள்ள நேரும்? அறிவு வடிவாகிய பரம்பொருளிடத்தில் மயக்கவுணர்வு இருந்தது என்றல் அமையுமா?

ஆகவே, கடவுளுக்கு வேறாகச் சிற்றறிவுடைய உயிர் என்பது உண்டு என்றும், அதுவே முதலில் மயக்கவுணர்வு உடையதாயிருந்து பின்னர் ஒன்றாதலை உணர்ந்தது என்றும் கூறுதலே ஏற்புடையதாகும்.

ஏகம் என்று சுட்டுவது உண்மையின் என்ற சிறிய தொடரில் இத்துணைக் கருத்துக்களையும் செறிய வைத்து அபேத வாதத்தை மறுத்துள்ளார் ஆசிரியர். மயக்கம் நீங்கி இரண்டு இல்லை, ஒன்றே என உணர்ந்து சொல்லுகிற பொருள் கடவுளுக்கு வேறாய் இருத்தலின் என்பது அத்தொடரின் பொருள்.

அவ்வாறாயின் இரண்டு இல்லை என்பதற்கு வேறு எப்படிப் பொருள் கொள்வது? என்ற வினா எழும். அதற்கு விடையாகவே ஏதுவின் பிற்பகுதியை அமைத்துள்ளார். அத்துவிதம் என்ற சொல்லே அன்னிய நாத்தியை உணர்த்தும் ஆயிட்டு என்பது அப்பகுதி.

இரண்டு இல்லை என்பதற்குப் பொருள் இறைவனும் உயிரும் இரண்டாதல் இல்லை என்பதேயாம். இரண்டாதல் இல்லை என்றால் இரண்டாம் தன்மை இல்லை, அஃதாவது, வேறு வேறாய்ப் பிரிந்து நிற்றல் இல்லை என்பதாம்.

ஆகவே அபேதவாதிகள் தமக்கு மேற்கோளாகக் காட்டும் அந்த அத்துவிதம் என்ற சொல்லே, கடவுளும் உயிரும் ஆகிய இரு பொருள்கள் தம்மிற் பிரிவின்றி ஒன்றுபட்டு நிற்றலை உணர்த்தும் என்கிறார் ஆசிரியர்.

அன்னிய நாத்தி - வேறாதல் இன்மை;

ஆயிட்டு - ஆகலான்;

இனி, இறைவன் மூவகையுமாய் இயைந்து நிற்றலை எடுத்துக் காட்டுக்களால் விளக்குகிறார்.

எடுத்துக்காட்டு -1
வெண்பா

6. கட்டும் உறுப்பும் கரணமும் கொண்டு உள்ளம்
இட்டதொரு பேர் அழைக்க என் என்றாங்கு- ஒட்டி
அவன் உளம் ஆகில்லான்; உளம் அவனா மாட்டாது;
அவன் உளமாய் அல்லனுமாம் அங்கு.

இதன் பொருள்:

உயிர், நரம்பு முதலியவற்றால் கட்டப்பட்ட உடம்பையும் ஐம்பொறி முதலிய கருவிகளையும் தன்னுடையனவாகக் கொண்டு நிற்கிறது. உடம்பிற்கு இடப்பட்ட  பெயரைச் சொல்லிப் பிறர் அழைத்த பொழுது அந்த வுயிர் வாளா இராமல் ஏன் எனக் கேட்கிறது. அந்த அளவிற்கு அது தன்னை உடம்பின் வேறாகக் கருதாமல், உடம்பின் வேறாய் நில்லாமல், உடம்பே தான் என  நிற்கிறது. அதுபோல இறைவனும் வேறாய் நில்லாமல் அனைத்து உயிர்களிலும் ஒன்றாய்க் கலந்து நிற்கின்றான். அங்ஙனம் நிற்பினும் அவன் உயிராகி விடான். உயிரும் அவனாகி விடாது. அவன் அவனே, உயிர் உயிரே. எனினும் இறைவன் உயிர் போல நிற்கவும் அதனின் வேறாய் நிற்கவும் வல்லன்.

பதவுரை:

உள்ளம் - உயிர்
கட்டும் உறுப்பும் -நரம்பு முதலியவற்றால் கட்டப்பட்டுள்ள உடம்பினையும்
கரணமும்   - ஐம்பொறி முதலிய கருவிகளையும்
கொண்டு    - தன்னுடையனவாகக் கொண்டு
இட்டது ஒருபேர் அழைக்க - அந்த உடம்பிற்கு இடப்பட்ட ஒரு பெயரைச் சொல்லிப் பிறர் அழைத்தபோது  
என் என்றாங்கு - என்ன? என்று மறுமொழி கொடுத்தாற் போல (இவ்வாறு, உயிர், உடம்பின் வேறாய் நில்லாது உடம்பே தானாய் நிற்றல் போல)
ஒட்டி - முதல்வனும் அனைத்து உயிர்களிலும் அவ்வுயிர்களே தானாய் ஒன்றி நிற்பவன் ஆவான்.
அங்கு - அவ்வாறு ஒட்டி நின்ற அவ்விடத்தும்
அவன்  உளம் ஆகில்லான் - முதல்வன் உயிராக மாட்டான்.
உளம் அவனா மாட்டாது - உயிர் முதல்வனாக மாட்டாது. (உயிர் உயிரே; முதல்வன் முதல்வனே. முன் சொன்ன உவமையில் உயிர் உடம்போடு ஒட்டி நிற்பினும் உயிர் உயிரேயாயும் உடம்பு உடம்பேயாயும் நிற்றல் போன்றது இது.)
(அங்ஙனமாயினும்)
அவன் உளமாய் அல்லனும் ஆம் - முதல்வன் உயிராய் நிற்கவும் அவற்றின் வேறாய் நிற்கவும் வல்லவன் ஆவன்.


விளக்கம்

மேற்கூறிய மூன்றனுள் ஒன்றாதல் என்பது இங்கு உவமை மூலம் உணர்த்தப்பட்டது. பின் இரண்டடிகள் இறைவனும் உயிரும் பொருளால் ஒன்றாகாமையைச் சுட்டி நிற்பன.

சைவ சித்தாந்தம் கூறும் அபேத நிலை:

உயிர் உடலிற் கலந்து உடலாகவே நிற்பது போல முதல்வன் உலகத்தோடு கலந்து உலகமேயாகி நிற்கின்றான் என்பதனை,

இருநிலனாய்த் தீயாகி நீரு மாகி
இயமானனாய் எறியும் காற்று மாகி
அருநிலைய திங்களாய் ஞாயி றாகி
ஆகாச மாய் அட்ட மூர்த்தி யாகி   (ஆறாம் திருமுறை, 94:1)
எனவும்,

ஊனாய் உயிரானாய் உடலானாய் உலகானாய்
வானாய் நிலனானாய் கடலானாய் மலையானாய் (ஏழாம் திருமுறை, 1:7)
எனவும்,

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி   (எட்டாம் திருமுறை, திருச்சதகம், 15)
 
எனவும் வரும் திருமுறைப் பகுதிகளால் தெளியலாம். இதுவே சைவ சித்தாந்தம் கூறும் அபேத நிலை (ஒன்றாதல்) ஆகும். இதற்கு மாறாகப் பொன்னே அணிகலன் ஆனாற் போல இறைவனே உலகமாய் ஆனான் எனக் கூறும் அபேத நிலை பொருந்தாத நிலையேயாகும். எவ்வாறெனில், பொன் அணிகலன் ஆகுங்காலை பொன்னின் தன்மையே அணிகலனிலும் இருக்கும். அதுபோல இறைவனே உலகமாய் ஆனான் என்றால் இறைவனின் தன்மையே உலகத்தினிடமும் காணப்படல் வேண்டும். ஆனால் இவ்வுலகத்தின் தன்மையோ இறைவனின் தன்மையினின்றும் முற்றிலும் வேறுபட்டதாய் உள்ளது. ஆகவே பொன்னும் அணிகலனும் போல இறைவனும் உலகமும் அபேதம் என்பார் கூற்றுப் பொருந்தாது என்பது புலனாகும்.

இவ்விடத்தில் மாணவன் பின்வருமாறு வினவுகிறான்; வேதத்தில் வரும் பிரமம் அத்துவிதம் என்ற தொடரில் உள்ள அத்துவிதம் என்பதற்கு இரண்டு இல்லை எனப் பொருள் கொண்டு இறைவனும் உலகமும் ஒன்றே.; இரண்டில்லை எனக் கூறும் அபேத வாதத்தை மறுத்தீர்கள். இனி, வேதம் பிரமம் அத்துவிதம் என்று மட்டும் கூறி அமையாமல் பிரமம் ஏகம் என்றும் கூறுகிறதே. பிரமம் ஏகம் என்பதற்குப் பிரமம் ஒன்றே உள்ளது; அதைத் தவிர இரண்டாவது பொருளில்லை என்பதுதானே பொருளாகிறது. அவ்வாறிருக்க அதற்கு முரணாக இரு பொருள்கள் உள்ளன என்றும், அவை பிரிப்பின்றி நிற்றலே அத்துவிதம் என்றும் கூறுதல் பொருந்துமோ? என ஐயுற்று வினவுகிறான். அதற்கு மறுமொழியாக இரண்டாவது எடுத்துக்காட்டுக் கூறுகின்றார் ஆசிரியர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !