சபரிமலை நடை திறப்பு: மண்டல காலம் துவக்கம்!
சபரிமலை: சபரிமலையில் கார்த்திகை 1 முதல், 41 நாட்கள் நடக்கும் பூஜை, "ஒரு மண்டல காலம் என, அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு, கார்த்திகை 1 தேதிக்கு ஒரு நாள் முன்னதாக, மலையாள மாதம், இன்று பிறக்கிறது. இதற்காக சபரிமலை நடை, நேற்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது.மேல்சாந்தி தாமோதரன்போற்றி, நடை திறந்து தீபம் ஏற்றினார். புதிய மேல்சாந்தி நாராயணன் நம்பூதிரி, அவரது தாய் சாவித்ரி அந்தர்ஜனம்; மாளிகைப்புறம் மேல்சாந்தி மனோஜ் ஆகியோர், 18ம் படியேறி சன்னிதானம் வந்தனர்.மாலை 6.30 மணிக்கு, புதிய மேல்சாந்திகள் பதவியேற்றனர்; மேல்சாந்திகளுக்கு, தந்திரி கண்டரரு மகேஷ்வரரு அபிஷேகம் நடத்தி ஐயப்பன் மூலமந்திரம் சொல்லிக் கொடுத்து, ஸ்ரீகோயிலுக்குள் அழைத்து சென்றார். வேறு பூஜைகள் நடக்கவில்லை. இரவு 10 மணிக்கு, நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 4 மணிக்கு, நடை திறந்து தீபம் ஏற்றியதும், இந்த ஆண்டுக்கான "மண்டல காலம் துவங்கும்; 4.15 மணிக்கு, மண்டல கால நெய்யபிஷேகம் நடக்கும். பின், உஷபூஜை, உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, இரவு புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜைகள் நடக்கும். பக்தர்களின் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள, "பம்பை ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மரக்கூட்டம் சுரங்கப் பாதை, மாளிகைப்புறம் கோயிலில் புதிய பாதை ஆகியவற்றை, அமைச்சர் சிவகுமார் தொடங்கி வைக்கிறார். குப்பைகளை, பக்தர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து அப்புறப்படுத்தும், புண்ணியம் பூங்காவனம் திட்டமும், இன்று காலை தொடங்குகிறது.