உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமணம் செய்பவர்களுக்கு இலவச அறை: திருமலையில் வசதி!

திருமணம் செய்பவர்களுக்கு இலவச அறை: திருமலையில் வசதி!

திருப்பதி: திருமலையில் திருமணம் செய்யும் புதுமண தம்பதியருக்கு, அவர்கள் தங்க வசதியாக, இலவச அறை வழங்க உள்ளதாக, தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர், பாபி ராஜு தெரிவித்தார்.

ஆறு பேர் தரிசிக்கலாம்: இதுகுறித்து, மேலும் அவர் கூறியதாவது: திருமலையில் திருமணம் செய்யும் தம்பதிகள், இரண்டு நாட்கள் திருமலையில் தங்குவதற்கு வசதியாக, அவர்களுக்கு ஒரு அறை இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும், திருமணம் முடிந்தபின், அவர்களுடன் இனி, ஆறு பேர் ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவர். அதுமட்டுமின்றி, அவர்களுக்கு, திருச்சானூர் பத்மாவதி தாயாரின் குங்குமம், வளையல் ஆகியவை பிரசாதமாக அளிக்கப்படும். திருமலை திருப்பதி தேவஸ்தானம், தினமும் ஏழுமலையானுக்கு நடத்தும் அனைத்து சேவைகள் மற்றும் பிற ஆன்மிக நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, தூர்தர்ஷனுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேவஸ்தானம் சார்பில், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் நடத்தப்பட்ட, சீனிவாசா கல்யாணத்தில் முறைகேடுகள் நடந்தன. அதனால், இனி, இந்து தர்ம பிரசார பரிஷத் தலைமையில், சீனிவாசா கல்யாணம் நடத்தப்பட உள்ளது. அதற்காக, நாடெங்கிலும், காலியாக உள்ள, இந்து தர்ம பிரசார பரிஷத்தின் ஒருங்கிணைப்பாளர் பதவி, விரைவில் நிரப்பப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

சி.சி.டி.வி., கேமராக்கள்: திருமலை ஏழுமலையான் கோவிலின் பாதுகாப்பை பலப்படுத்த, சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்த, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள, நிபுணர்கள் குழு திருமலைக்கு வந்துள்ளது. இதில், தகவல் தொடர்பு மற்றும் தொழில் நுட்பத் துறை உயர் அதிகாரிகள் உள்ளனர். இவர்கள், நேற்று முதல் திருமலையில் கேமராக்கள் பொருத்த உள்ள பகுதிகளில், ஆய்வை துவங்கினர்.

குழாய்கள் சீரமைப்பு: திருமலையில் கனமழை பெய்யும் சமயங்களில், ஏழுமலையான் கோவில் முன்வாசல் மற்றும் நான்கு மாடவீதிகளில், மழைநீர், வௌ?ளமென தேங்கி விடுகிறது. இதை அகற்ற, தேவஸ்தானம், தீயணைப்பு படையினரை அவ்வப்போது வரவழைக்கிறது. அதனால், தேங்கிய நீரை அகற்ற வசதியாக, கோவில் எதிரில் உள்ள கழிவுநீர் குழாய்களை, சீரமைக்கும் பணிகள், நேற்று முன்தினம் துவங்கின. மேலும், அப்பகுதி முழுவதும் உள்ள அனைத்து கழிவுநீர் கால்வாய்களும், குடிநீர் குழாய்களும், சீரமைக்கப்பட உள்ளன.

என்.ஐ.டி., ஆலோசனை: திருமலையில் உள்ள அருங்காட்சியகத்தில் ஏழுமலையான் ஆபரணங்களும், நன்கொடையாக கிடைத்த, புராதன தங்க நாணயங்களும், பக்தர்களின் பார்வைக்கு வைக்க, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதனால், அது குறித்த பாதுகாப்பு அம்சங்களை தெரிந்து கொள்ள, தேவஸ்தான உயர் அதிகாரிகள் குழு, ஆமதாபாத்தில் உள்ள, தேசிய நகை வடிவமைப்பு பயிற்சி நிறுவனத்திற்கு (என்.ஐ.டி.,) சென்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !