உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பத்ரகாளியம்மன் கோவில் ஸ்வாமி அழைப்பு விழா

பத்ரகாளியம்மன் கோவில் ஸ்வாமி அழைப்பு விழா

அந்தியூர்: கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, பத்ரகாளியம்மன் ஸ்வாமிக்கு அழைப்பு விடுக்க, இருபதுக்கும் மேற்பட்ட பழங்களை படைத்து பூஜை செய்யப்பட்டது. அந்தியூரை சேர்ந்த வளையல் வியாபாரி முருகன்பாபு என்பவர் கனவில், கார்த்திகை அமாவாசை நாளன்று, தீர்த்தக்குடத்துடன் சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என, செல்லீஸ்வரர் வகையறா பத்ரகாளியம்மன் ஸ்வாமி சொன்னதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பத்தாண்டுகளாக, தீர்த்த பூஜையின் முன் நிகழ்ச்சியாக, 15 நாட்களுக்கு முன்னதாக, 20க்கும் மேற்பட்ட பழ வகைகளை ஸ்வாமிக்கு படைத்து அபிஷேக பூஜை நடத்துவது வழக்கம். இவ்வகையில், நேற்றுமுன்தினம் மதியம், அந்தியூர், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்த பெண், ஆண் பக்தர்கள், பத்ரகாளியம்மன் ஸ்வாமிக்கு அழைப்பு விடுக்க ஊர்வலமாக புறப்பட்டனர். சத்யா நகர் ஈஸ்வரன் கோவிலில் இருந்து புறப்பட்ட, 50க்கும் அதிகமான பக்தர்கள், பல வகை பழங்களை தட்டுகளில் ஏந்தி கோவிலுக்கு சென்றனர். கோவிலில் சிறப்பு அபிஷேக பூஜை செய்யப்பட்டவுடன், பக்தர்கள் பழங்களை அவரவர் வீட்டுக்கு எடுத்து சென்றனர். கார்த்திகை அமாவாசையன்று, 501 தீர்த்த குடங்கள் எடுத்து சென்று, பத்ரகாளியம்மன் ஸ்வாமியை, ஈஸ்வரன் கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !