உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரசீதுகள் இன்றி கணக்கு சமர்ப்பிப்பு பிரபல கோவிலின் செயல் அலுவலருக்கு ரூ.1 கோடி அபராதம்

ரசீதுகள் இன்றி கணக்கு சமர்ப்பிப்பு பிரபல கோவிலின் செயல் அலுவலருக்கு ரூ.1 கோடி அபராதம்

ரசீதுகள் இல்லாமல், 1.16 கோடி ரூபாய்க்கு வரவு செலவு கணக்கு சமர்ப்பித்த, மாசாணி அம்மன் கோவில் செயல்  அலுவலரிடம் இருந்து, அத் தொகையை வசூலிக்க வேண்டும் என, அறநிலையத்  துறை தணிக்கை அறிக்கையில், கூறப்பட்டுள்ளது. கோவை மாவட்டம், ஆனைமலை அருகில், பிரசித்த பெற்ற மாசாணி அம்மன் கோவில் உள்ளது.  இக்கோவிலுக்கு, பிற மாநிலங்களில் இருந்தும், அதிகளவில் பக்தர்கள் வருவர். மேலும், உண்டியல் வசூல், வாடகை   உள்ளிட்ட பல்வேறு இனங்கள் மூலம், ஆண்டுக்கு, 7 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து  வந்தது.   கடந்த, 2010, டிசம்பர் மாதம், இந்த கோவிலில் குடமுழக்கு நடந்தது. இதற்கான, உத்தேச செலவு, 48 லட்சம் ரூபாய் என கணக்கிட்டனர். இதில், 18  லட்சம் ரூபாயை, கோவில்  நிதியில் இருந்து செலவிடுவது;  மீதியுள்ள, 30 லட்சம் ரூபாயை, பக்தர்களிடம் இருந்து  நன்கொடையாக பெறுவது என, தீர்மானிக்கப்பட்டது.  எந்தெந்த பணிக்கு, எவ்வளவு நன்கொடை பெற வேண்டும் என, முன்கூட்டியே தீர்மானித்து, அறங்காவலர் குழுவின் ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். ஆனால், அப்போது பணியில் இருந்த, கோவில் செயல் அலுவலர் வெற்றிச்செல்வன், அறங்காவலர் குழு மற்றும் அறநிலையத் துறை ஆணையரிடம் அனுமதி பெறாமல், "73 லட்சம் ரூபாய் செலவானது என, கணக்கு எழுதியுள்ளார். அத்துடன், பல்வேறு காரணங்களுக்காக செலவு செய்து, அதற்கான, "வவுச்சர்களையும் தாக்கல் செய்யவில்லை. 2010, அக்டோபர் முதல் 2011, ஜூலை வரை, செய்யப்பட்ட செலவினங்களுக்கு, "வவுச்சர்கள் இல்லை என, தணிக்கை  அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.   தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "வவுச்சர்கள் இல்லாமல், செலவுகளை மேற்கொண்டது, இந்து சமய அறநிலையத் துறை சட்டப்படி, முரணான செயல். துறை அனுமதி பெறாமல், செலவு விவரங்களை  அறங்காவலர் குழு கூட்டத்தில் வைத்து, முன் அனுமதி  பெறாமல், "வவுச்சர்கள்  இன்றி, 1.16 கோடி ரூபாய்க்கு கணக்கு சமர்ப்பித்தது, கோவில் நிதியை, விரயம் செய்யும்  நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என, கருதப்படுகிறது.  எனவே, 1.16 கோடி ரூபாயை, செயல் அலுவலரிடம் இருந்து திரும்ப பெற வேண்டும்;  துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !