சத்யசாய் பாபா பிறந்த நாள் விழா மாணவர்களுக்கு அன்னதானம்
வால்பாறை: வால்பாறையில், சத்யசாய் பாபாவின் 88வது ஆண்டு பிறந்த நாள் விழாவையொட்டி, ஆதிவாசி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வால்பாறை சத்யசாய் சேவா சமிதி சார்பில், சத்யசாய் பாபாவின் 88வது ஆண்டு பிறந்த நாள் விழா, துளசியம்மாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விழாவையொட்டி, கடந்த 23ம் தேதி காலை 9.00 மணிக்கு திருக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து காலை 10.00 மணிக்கு பஜன் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதனைத்தொடர்ந்து, காலை 11.00 மணிக்கு அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு பால், ரொட்டி, பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் பகல் 12.30 மணிக்கு ஆதிவாசி பள்ளி மாணவர்களுக்கு நாராயணசேவை (மதிய உணவு) பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலை 3.00 மணிக்கு ஸ்ரீசத்யசாய், பால விஹால் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. மாலை 4.00 மணிக்கு திருவிளக்கு பூஜையும், 5.00 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவும், மாலை 6.00 மணிக்கு பஜன் மகாதீபாராதனை, மங்கள ஆர்த்தியும் நடைபெற்றன.விழாவிற்கான ஏற்பாடுகளை, வால்பாறை ஸ்ரீ சத்யசாய் சேவா சமிதி கன்வீனர் இளங்கோவன், ஆன்மிக இணைப்பாளர் முத்துசாமி, சேவை ஒருங்கிணைப்பாளர்கள் சுப்பிரமணியம், சண்முகவேலு, கல்வி ஒருங்கிணைப்பாளர் வேணி உட்பட பலர் செய்திருந்தனர்.