லட்சுமி நரசிம்மர் கோவிலில் வருட உற்சவ விழா!
பொள்ளாச்சி: லட்சுமி நரசிம்மர் கோவிலில் நடக்கும் வருட உற்சவ விழாவில், பக்தர்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி- பாலக்காடு சாலையில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில், வரும் 30ம் தேதி மற்றும் 1ம் தேதி வருட உற்சவ விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 30ம் தேதி காலை 6.00 மணிக்கு மகா சுதர்ஷன ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கிறது. காலை 10.00 மணிக்கு, பாலக்காடு சாலை ரயில்வே கேட் அருகில் உள்ள சிவசக்தி விநாயகர் கோவிலில் இருந்து நரசிம்மர் கோவிலில் முற்காலத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட ஆஞ்சநேயர், ஆதிசேஷன், கருடாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீர்த்த கலசம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. காலை 11.00 மணியளவில் விஷ்வசேனர் ஆராதனம், வாசுதேவ புண்யாஹவாசனம், அனுக்ஞை, மகா சங்கல்பம், கலச ஆவாஹனம், பஞ்சசூக்த பாராயணம், மந்திர ஜபங்கள் நடக்கிறது. மேலும், மாலை 4.30 மணிக்கு 16 வகையான திருமஞ்சன அபிஷேகம் நடக்கிறது.