பஞ்ச துவாரகைக்கு பாரத தரிசன சிறப்பு ரயில்!
சென்னை: இந்திய ரயில்வே உணவு சுற்றுலா கழகம் சார்பில், மதுரையில் இருந்து துவாரகாவிற்கு பாரத தரிசன சுற்றுலா சிறப்பு ரயில், டிச., 12ம் தேதி இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து, டிச., 12ம் தேதி, அதிகாலை புறப்படும் இந்த ரயில், கரூர் சேலம் சென்னை சென்ட்ரல் வழியாக, கிருஷ்ணர் கோவில்கள் அமைந்துள்ள, கர்நாடக மாநிலம், நவ பிருந்தாவனம்; ராஜஸ்தான் மாநிலம்; புஷ்கர் பிரமன் கோவில்; குஜராத் மாநிலம், நாத் துவாரகா, காங்ரோலி துவாரகா, பேட் துவாரகா, டாக்கோர் துவாரகா மற்றும் கடலில் தோன்றி மறையும் நிஷ்கலங்க மகாதேவ் கோவில்களுக்கு சென்று வரும். இந்த ரயில் பயணம், 12 நாட்கள் கொண்ட சுற்றுலாவாக ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ரயில் புறப்படும் நேரம், பயணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் தெரிவிக்கப்படும். இப்பயணத்திற்கு ஒரு நபருக்கு, 7,425 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இக்கட்டணத்தில், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி; தென் மாநில சைவ உணவு; சுற்றிப்பார்க்க பஸ் வசதி; தங்கும் இடம்; மேலாளர் மற்றும் பாதுகாவலர் வசதி செய்யப்பட்டு உள்ளது. மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு சலுகையும் உண்டு. இச்சுற்றுலா செல்ல விரும்பம் உள்ளவர்கள், இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழத்தின், சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய அலுவலகத்திற்கு, 044 6459 4959, 90031 40681 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும் www.railtourismindia.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.