உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சமண துறவிகளின் பயண வழித்தடயங்கள் பாழாகும் பாழிகள்!

சமண துறவிகளின் பயண வழித்தடயங்கள் பாழாகும் பாழிகள்!

காஞ்சிபுரம்: பல்லவர் காலத்தில், சமண துறவிகளின் வழித்தங்கலுக்காக, சாலையோரங்களில் கருங்கற்களால் உருவாக்கப்பட்ட பாழிகள், பராமரிப்பில்லாமல் சீரழிந்து வருகின்றன. காஞ்சிபுரம் - வந்தவாசி, காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு, செங்கல்பட்டு -- மதுராந்தகம், காஞ்சிபுரம் -- உத்திரமேரூர் ஆகிய சாலைகளின் ஓரங்களில், சமணர்கள் அமைத்த, 90 பாழிகள் (வழித்தங்கல் மண்டபங்கள்) உள்ளன. இவற்றில், ஒரு அறை மற்றும் ஓய்வு எடுப்பதற்காக, கருங்கல்லில் உருவாக்கப்பட்ட சிறு படுக்கை உள்ளன. இவை, கலை நயமிக்க வேலைபாட்டுடன் அமைந்தவை.குளங்கள் ஒவ்வொரு பாழியையும் ஒட்டி, இரண்டு முதல் மூன்று ஏக்கர் பரப்பளவில் குளம் வெட்டப்பட்டுள்ளது. புனிதப்பயணம் மேற்கொண்ட சமணத் துறவிகள், இவற்றில் நீராடி, கருங்கல் அறையில் தங்கி ஓய்வு எடுத்து, மீண்டும் பயணத்தை தொடர்ந்துள்ளனர். பாழிகளும் அதை ஒட்டிய குளங்களும், இப்போது வரலாற்று தடயங்களாக உள்ளன. ஊர் ஊராய் அலைந்து இந்த பாழிகள், பல்ல வர்களால் அமைக்கப்பட்டிருக்கலாம் என, வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். கல்வெட்டுக்களும், இவை பற்றி பேசுகின்றன. பல்லவ மன்னர் மகேந்திரவர்மன் ஆட்சியில், சமணத் துறவிகள் ஊர் ஊராக சென்று, கருத்துக்களை பரப்பினர். இதற்காக நடை பயணம் செய்தனர். இவர்கள், செல்லும் வழியில் தங்குவதற்கு வசதியாக, சாலை ஓரம் கட்டப்பட்டவைதான் பாழிகள் என்று, அழைக்கப்படுகின்றன. இவை, பய ணிக்கும் துறவிகளின் ஓய்விற்கும், தியானத்திற்கும் பயன்பட்டன.நடைபயணிகளுக்கு...வரலாற்று சிறப்பு மிக்க இந்த பாழிகள், தற்போது சீரழிந்து வருகின்றன. நல்ல நிலையில் உள்ள சில பாழிகளை, தற்போது திருப்பதி, திருத்தணி, மேல்மருவத்துார், சபரிமலை ஆகிய கோவில்களுக்கு நடை பயணமாக செல்லும் பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.வழித்துணையாக்கலாம்பழுதடைந்து இடிந்து விழும் நிலையில், சில பாழிகள் உள்ளன. சில இடங்களில், இவை ஆக்கிரமிக்கப்பட்டுஉள்ளன.கரு தொல்லியல் துறை இவற்றை மீட்டு, வரலாற்று சின்னங்களாக பராமரிக்கலாம். அதே நேரத்தில், நடை பயணமாக கோவில்களுக்கு செல்லும் பக்தர்களின் பயன்பாட்டிற்கும் கொண்டு வரலாம். வரலாற்று சின்னங்களான பாழிகளை, சந்ததியினர் தெரிந்து கொள்ளும் வகையில் பாதுகாக்க வேண்டும். பராமரிப்பு யாரிடம் : காஞ்சிபுரம் அறநிலையத் துறை அதிகாரி தியாகராஜன் கூறுகையில், சாலை ஓரங்களில் உள்ள பாழிகள், அறநிலையத் துறை பராமரிப்பில் இல்லை. கிராம நிர்வாக அலுவலகங்களில் உள்ள ஆவணங்களிலும், வரைபடத்திலும், பொது இடங்களில் பாழிகள் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. இவை, தற்போது வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் தான் உள்ளன, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !