பொள்ளாச்சி நரசிம்மர் கோவிலில் வருட உற்சவ விழா
பொள்ளாச்சி: பொள்ளாச்சி லட்சுமி நரசிம்மர் சுவாமி கோவிலில் இரு நாட்கள் நடந்த வருட உற்சவ விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பொள்ளாச்சி- பாலக்காடு சாலையில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் நேற்றுமுன்தினம் காலை 6.00 மணிக்கு மகா சுதர்ஷன ஹோமத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. காலை 10.00 மணிக்கு, பாலக்காடு சாலை சிவசக்தி விநாயகர் கோவிலில் இருந்து, நரசிம்மர் கோவிலில் முற்காலத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட ஆஞ்சநேயர், ஆதிசேஷன், கருடாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீர்த்த கலசம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. காலை 11.00 மணிக்கு விஷ்வக்சேனர் ஆராதனம், வாசுதேவ புண்யாஹவாசனம், அனுக்ஞை, மகா சங்கல்பம், கலச ஆவாஹனம், பஞ்சசூக்த பாராயணம், மந்திர ஜபங்கள் நடந்தது. மேலும், மாலை 4.30 மணிக்கு 16 வகையான திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. நேற்று அதிகாலை 5.00 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, விஸ்வரூப தரிசனம், கோமாதார பூஜையும், ஆறு வகையான ஹோமங்களும் நடந்தன. அலங்கார தீபாராதனை, சாற்றுமறை, தீர்த்த பிரசாதமும் வழங்கப்பட்டன. காலை 11.00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், நரசிம்ம பிரபத்தி பாராயணம் நடந்தது.விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.