திருப்பதி பாதுகாப்பிற்கு துணை ராணுவம் வருகை!
திருப்பதி: திருப்பதி பாதுகாப்பிற்காக மத்திய உள்துறையால் அனுப்பப்பட்ட, துணை ராணுவப் படையினர் தங்கள் பணிகளை துவக்கினர். ஆந்திர பிரிவினைக்கான மசோதா, ஏற்றுக்கொள்ளப்பட்டால் மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடிக்கும். அதை, கட்டுக்குள் கொண்டு வர, மத்திய உள்துறை அமைச்சம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், திருப்பதி பாதுகாப்பிற்கு, துணை ராணுவப்படையை அனுப்ப, மத்திய உள்துறை அமைச்சகம் முடிவெடுத்தது. இதுகுறித்த தகவல்களை , ஆந்திர மாநில உள்துறை அமைச்சகம், திருப்பதி மற்றும் சித்தூர் எஸ்.பி., க்கு தகவல் அனுப்பியது. திருப்பதியில், தற்போது, பாதுகாப்பு பணியில், மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களும் உள்ளனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின் படி, தேசிய பாதுகாப்பு பிரிவு மற்றும் துணை ராணுவப்படை மற்றும், ஐதராபாத்தில் இருந்து ஆந்திர பிரதேச சிறப்பு போலீசார் என, 400 பேர் திருப்பதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். நேற்று திருப்பதி வந்து சேர்ந்த இவர்கள்,அங்குள்ள பல்கலைகழகங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளிலும், பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். மேலும், இதற்கு முன் ஆர்ப்பாட்டம் செய்தவர்களை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யவும் காவல்துறை திட்டமிட்டுள்ளது. இதை தொடர்ந்து, பாதுகாப்பிற்காக தமிழ்நாடு, கர்நாடகாவிலிருந்து,கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வாகனங்கள், ஆயுதங்களுடன் துணை ராணுவத்தினர்,வரவழைக்கப்படுகின்றனர். மேலும், ஒன்றுபட்ட ஆந்திராவுக்காக அரசு சொத்துகளை நாசம் செய்பவர்கள் மேல், கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.