மோர்ப்பண்ணையில் சப்த கன்னியர் பொங்கல் விழா: கடல் அன்னைக்கு நன்றி தெரிவிப்பு
ஆர்.எஸ்.மங்கலம்: கடல் அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக ராமநாதபுரம் மாவட்டம் மோர்ப்பண்ணை கிராமத்தில் சப்த கன்னியர் பொங்கல் விழா நடந்தது.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்ப்பண்ணை மீனவர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் சிறக்கவும், கடல் அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் சப்த கன்னியர் பொங்கல் விழா ஆண்டுதோறும் நடக்கிறது. அதன்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று இவ்விழா நடந்தது. இதற்காக ஒரு வாரத்திற்கு முன் கிராமத்தினர் சார்பில் ஏழு சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பொங்கல் வைக்கும் நடைமுறைகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. இங்குள்ள ரணபத்ரகாளியம்மன் கோயில் முன் சப்த கன்னிகளாக அலங்கரிக்கப்பட்ட ஏழு சிறுமிகள் மூலம் தனித்தனி பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. தொடர்ந்து கோயிலில் பூஜை செய்யப்பட்டு கிராமத்தினர் சார்பில் செய்யப்பட்ட சிறிய படகில் பூஜை பொருட்களுடன் தீபம் ஏற்றி கோயிலில் வழிபட்டனர். பின் அப்படகை கிராமத் தலைவர் நாகநாதன் தலைமையில் கொண்டு செல்ல, சப்த கன்னிகள் கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கடலுக்கு சென்றனர். பொங்கல், பூஜை பொருட்களை அப்படகில் வைத்து வழிபாடு செய்து கடலில் விட்டு கடல் அன்னையை வணங்கினர்.