உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதிலமடைந்து வரும் பழங்கால சிற்பங்கள்; ஆவணப்படுத்திய ஆய்வாளர்கள்

சிதிலமடைந்து வரும் பழங்கால சிற்பங்கள்; ஆவணப்படுத்திய ஆய்வாளர்கள்

உடுமலை: உடுமலை அருகே வழிபாட்டில் இருக்கும் கற்சிற்பங்கள் மற்றும் நடுகற்களை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் ஆய்வு செய்து ஆவணப்படுத்தினர்.


உடுமலை கணபதிபாளையம் வெனசப்பட்டிக்கு அருகில், பழமையான மாலகோவில் உள்ளது. இந்த கோவிலுள்ள  நடுகற்கள் குறித்து, உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் நேரடியாக ஆய்வு செய்து ஆவணப்படுத்தினர்.


அவர்கள் கூறியதாவது: வெனசபட்டி மாலகோவிலில், மூன்றடி உயரமும், இரண்டடி அகலமும் கொண்ட தலைப்பாகையுடன்  சிற்பம் இருக்கிறது. அருகில் வழிபடும் நிலையில்  ஆண், பெண் உருவம் பொறித்த சிற்பங்கள் உள்ளன. உடுமலை சுற்று வட்டாரங்களில், கால்நடைகளுக்காக  ஏராளமான நடுகற்சிற்பங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இவை அனைத்தும்  புடைப்புச்சிற்பங்களாகவே காணப்பட்டது. ஆனால் இங்கு காணப்படும் கம்பீரமான ஆண் சிற்பம், குழிச்சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.  இதனை இந்தப் பகுதி மக்கள் எட்டப்ப நாயக்கர் என்றும் எத்திலப்ப நாயக்கர் என்றும் வழக்காற்றில் கூறுகின்றனர்.


தளி பாளையப்பட்டு பகுதியை ஆட்சி செய்த, தளி எத்தலப்ப மன்னரின் சிலையாக இருக்கலாம் எனவும் இந்தப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மெட்ராத்தி, எலையமுத்தூர், பண்ணைக்கிணறு, சலவநாயக்கன்பட்டி, வாகத்தொழுவு போன்ற பகுதியில்,  மனித வாழ்வியலைக் குறிக்கும் நிகழ்வுகளை சிற்பங்களாக வடித்தும், சிவன் வழிபாட்டைக் குறிக்கும் சின்னங்களும், வைணவ வழிபாட்டைக் குறிக்கும் சின்னங்களும் அந்த வீரகம்பங்களில் காணப்பட்டது. ஆனால், இங்கிருக்கும் மாலகோவிலில்  காளை மாடு பொறித்த சிற்பங்களும், தலைவன் தலைவி வழிபடும் சிற்பங்களும், ஒரு அரசன், ஒரு தளபதி, ஒரு படைத்தலைவன்  போன்ற சிற்பங்களும் இருப்பதும், அதனை இந்த மக்கள்  மாலகோவில் என அழைப்பது, மாறுபாடாக உள்ளது. தளி பாளையத்திற்குபட்பட்ட எத்தலப்ப மன்னர் ஆட்சி செய்ததற்கான , தொல்லியல் எச்சங்களாகவே இக்கோவிலை பார்க்க முடிகிறது என வரலாற்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர். அதிலும் பெரும்பாலான சிற்பங்கள்  சிதிலமடைந்து இருப்பதும், ஒருசில சிற்பங்கள் மட்டுமே வழிபாட்டில் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு தெரிவித்தனர். இந்தக் கள ஆய்வினை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தின் சார்பில், சிவகுமார். அருட்செல்வன் பேராசிரியர் ஜெய்சிங் உள்ளிட்டோர் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !