பாலசாஸ்தா பஜனையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்!
பெரியகுளம்: பெரியகுளம் கம்பம்ரோட்டில், பாலசாஸ்தா கோயில் உள்ளது. சபரிமலையில் மூலவர் அய்யப்பன் அமைந்தது போல், இங்கும் அமைக்கப்பட்டுள்ளது. காலையில் நெய்அபிஷேகம் மற்றும் தீபாரதனை, மாலையில் அய்யப்ப பக்தர்கள் பஜனை குழு சார்பில், பக்தி பாடல்கள் பாடி, கார்த்திகை 1 ம் தேதி முதல் தினமும் அன்னதானம் நடந்து வருகிறது. இதில் சபரிமலைக்கு செல்லும் பாதயாத்திரை குழுவினர், கோயிலில் தங்கி சாப்பிட்டு செல்வது சிறப்பு. ஒவ்வொரு நாளும், அன்னதானம் வழங்குவதற்கு ஆன்மிக பக்தர்கள் உதவி செய்து வருகின்றனர். இதனை அறிந்த, ரஜினி ரசிகர் மன்றம் முன்னாள் நகர செயலாளர், மார்க்கெட்டில் கறிவேப்பிலை கடை நடத்தி வரும் எஸ்.சலீம்ராஜா, தானாக முன்வந்து அன்னதானம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்தார். பஜனை குழுவில் கலந்து கொண்ட சலீம்ராஜா மற்றும் அவரது இஸ்லாமிய நண்பர்கள், அய்யப்பனை வழிபட்டனர். 10 ஆயிரம் ரூபாய் செலவில் அன்னதானத்தை சலீம்ராஜா வழங்கினார். மேலும் ஒவ்வொரு ஆண்டும், அன்னதானம் வழங்குவதாக தெரிவித்தார். தலைவர் சுப்புராஜ், செயலாளர் சிவஸ்ரீமோகன், பொருளாளர் மணி ஆகியோர் இஸ்லாமியர்களை வரவேற்றனர். மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் நிகழ்ச்சியாக இருந்தது.