உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கேட்பாரின்றி சாலையில் கிடக்கும் பழமையான கல் தூண்கள்!

கேட்பாரின்றி சாலையில் கிடக்கும் பழமையான கல் தூண்கள்!

திருவொற்றியூர்: குடிநீர் குழாய் அமைக்க, பள்ளம் தோண்டும்போது, கண்டெடுத்த பழமையான ஐந்து கல் தூண்கள் மற்றும் கல் பாறைகள், சாலையில் கேட்பாரின்றி தூக்கி வீசப்பட்ட சம்பவம், சமூக ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.திருவொற்றியூர் மண்டலத்தில், 88 கோடி ரூபாய் செலவில், குடிநீர் அபிவிருத்தி திட்ட பணி மேற்கொள்ளப்படுகிறது. சில நாட்களுக்கு முன், எல்லையம்மன் கோவில் அருகே, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் ராட்சத குடிநீர் குழாய் பதிக்க, பொக்லைன் உதவியுடன், ஐந்தடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது.அப்போது, ஐந்து பழங்கால கல் தூண்கள், கல் பாறைகள் கண்டெடுக்கப்பட்டன. லிங்கம், பூக்கள் உள்ளிட்ட பல்வேறு சிற்பங்கள் தூண்களில் காணப்படுகின்றன. இதுகுறித்து, இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறையினருக்கு, கண்டெடுத்த தொழிலாளர்கள், தகவல் கொடுத்தனர். ஆனால், அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதனால், சாலையோரத்தில் தூண்கள் கேட்பாரின்றி கிடக்கின்றன. இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் சிலர் கூறுகையில், பழமையான கல் தூண்கள் சாலையில் கேட்பாரின்றி கிடப்பது கவலை அளிக்கிறது. விரைவில் அதை மீட்டு, அருங்காட்சியகத்தில் வைக்க தொல்பொருள் ஆய்வு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !