டிச., 6ல் கோவிலுக்கு பாதுகாப்பு தேவை அறநிலையத்துறை போலீஸுக்கு கடிதம்!
நாமக்கல்: தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை கோவில்களுக்கு, நாளை (டிச., 6ம் தேதி) பாதுகாப்பு தேவை, என அறநிலையத்துறை அதிகாரிகள் போலீஸுக்கு கடிதம் வைத்துள்ளனர். இந்துசமய அறநிலைத் துறை கட்டுப்பாட்டில், கோவில், மடம், கோவிலுடன் கூடிய மடம், அறக்கட்டளை, சமண மத கோவில் என, 38,529 நிறுவனங்கள் செயல்படுகின்றன. பொது நிர்வாகம், பணியாளர் நியமனம், அசையும் மற்றும் அசையா சொத்துகளை பராமரித்தல், திருப்பணிகள் மேற்கொள்ளுதல், வழக்கு, தணிக்கை ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக, 11 மண்டலங்களில் செயல்படும், 24 கோட்டங்கள் மூலமாக, பொதுமக்கள் நன்கொடை, கோவில் நிறுவனத்தின் சொந்த நிதி, நிதி மாற்று நிதி, அரசு மானியம், பொதுநலநிதி, ஆலய மேம்பாட்டுத் திட்டம், சுற்றுலா மேம்பாடு ஆகியவை மூலம் வருவாய் கிடைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், பாபர்மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, டிசம்பர், 6ம் தேதி, பிரசித்திப்பெற்ற கோவில்களில், சிறப்பு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அசம்பாவிதங்களை தவிர்க்க, அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். அதற்காக, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் மற்றும் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்கு முறையான கடிதம் வைக்க வேண்டும் என, அறநிலையத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். "கடந்த காலங்களில், டிச., 6ம் தேதி, பிரசித்திப் பெற்ற கோவில்களில் மட்டும் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். ஆனால், நடப்பு ஆண்டில், அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும், போலீஸ் பாதுகாப்பு தேவை என போலீஸுக்கு கடிதம் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என, அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.