பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் தெப்ப உற்சவ திருவிழா
கடையநல்லூர்: பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலில் தெப்ப உற்சவ திருவிழா நேற்று நடந்தது. பண்பொழியில் பிரசித்திபெற்று விளங்கும் திருமலைக்குமார சுவாமி கோயிலில் தெப்ப உற்சவ திருவிழா ஆண்டுதோறும் கார்த்திகை கடைசி சோமவார தினத்தன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று கார்த்திகை கடைசி சோமவாரத்தை முன்னிட்டு தெப்ப உற்சவ திருவிழா நடந்தது. சீரமைக்கப்பட்ட தெப்பக்குளம் பண்பொழி பெரிய குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டிருந்தது. தொடர்ந்து நேற்று மாலை திருக்குமரன் தெப்ப உற்சவத்திற்காக அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து திருக்குமரனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. வாணவேடிக்கை மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் முழங்கிட தெப்பத்தில் 11 முறை திருக்குமரன் வலம் வந்தார். விழாவில் கோயில் உதவிஆணையர் கார்த்திக், முன்னாள் திருப்பணிக் குழு தலைவர் அருணாசலம், கிருஷ்ணாபுரம் ரவிச்சந்திரன் ராஜா, பண்பொழி டவுன் பஞ்., தலைவர் சங்கரசுப்பிரமணியன், அ.தி.மு.க., செயலாளர் பரமசிவன், தென்காசி அட்மா தலைவர் கரிசல் முத்தழகு மற்றும் கோயில் பணியாளர்கள், மண்டகபடிதாரர்கள், கட்டளைதாரர்கள் பண்பொழி, கரிசல்குடியிருப்பு, வடகரை, அச்சன்புதூர், நெடுவயல், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.