வீரவநல்லூர் கோயிலில் திருவாதிரை திருவிழா துவக்கம்
வீரவநல்லூர்: வீரவநல்லூர் பூமிநாத சுவாமி - மரகதாம்பிகை கோயிலில் திருவாதிரை பெருந்திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி அம்பாளுக்கு விசேஷ அபிஷேக அலங்காரம் மற்றும் தீப ஆராதனையும் நடக்கிறது. இரவில் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடக்கிறது. வரும் 15ம் தேதி நடராஜர் முதல் சேவையும், 16ம் தேதி வெள்ளை சாத்தி சப்பரத்தில் 2வது சேவையும், அடுத்து பச்சை சாத்தி சப்பரத்தில் வீதி உலாவும் நடக்கிறது.வரும் 17ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. விழாவின் சிறப்பு நாளான ஆருத்ரா தரிசனம் வரும் 18ம் தேதி நடக்கிறது. அன்று காலை நடராஜர் அபிஷேகம், அலங்காரம், பெருந்திரி பாவாடை, தீப ஆராதனையும், வீதி உலாவும் நடக்கிறது. மதியம் சுவாமி, அம்பாள் தீர்த்தவாரியும், இரவில் சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலாவுடன் விழா நிறைவு பெறுகிறது.ஏற்பாடுகளை செயல் அலுவலர் வைரவன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.