மடத்துவிளை புனித சவேரியார் உருவ கப்பல் பவனி
ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி மடத்துவிளை புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு புனித சவேரியார் உருவ கப்பல் பவனி நடந்தது. ஆறுமுகநேரி மடத்துவிளையில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இங்கு புனித சவேரியார் திருவிழா கடந்த 25ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை பாடற்திருப்பலி, மாலை ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 2ஆம் தேதி மாலை திருவிழா மாலை ஆராதனை நடந்தது. திருவிழா தினமான 3ம் தேதி காலை முதல் திருப்பலியும் பின்னர் ஆடம்பர கூட்டுத் திருப்பலியும் நடந்தது. இதனை மதுரை மேற்றாசனம் பங்கு தந்தை சேவியர், பங்குதந்தைகள் ஆறுமுகநேரி ரூபர்ட் அருள்வளன், ஜெய்கர் (சிறைத்துறை), சுகந்தன் (நற்செய்தி தூதுவர் பணி) குரும்பூர் ஆரோக்கியதாஸ், உதவி பங்கு தந்தை இருதயராஜ் ஆகியோர் நடத்தினர். 102 குழந்தைகள் புதுநன்மை எடுத்தனர். மாலையில் ஜெபமாலை மற்றும் நற்கருணை ஆசீருக்கு பின்னர் புனித சவேரியார் உருவ கப்பல் தேர்பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட வண்டியில் கப்பல் போன்று அமைக்கப்பட்டு அதில் புனித சவேரியார் உருவம் வைக்கப்பட்டிருந்தது. புனித சவேரியார் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் தேர் பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியே வந்து மேல சண்முகபுரம் புனித அன்னம்மாள் ஆலயம் வந்தடைந்தது. மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு புனித சவேரியார் ஆலயம் வந்தடைந்தது. திருப்பலியைத் தொடர்ந்து கொடியிறக்கம் செய்தனர். ஏற்பாடுகளை பங்கு தந்தை, ஊர் தலைவர் அமிர்தம் பர்னாந்து மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.